‘தங்கையின் திருமணத்திற்கு’... ‘ஆசையாக சென்ற அண்ணனுக்கு’... 'வழியில் நடந்த கோர சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 04, 2019 04:03 PM

தங்கையின் திருமணத்திற்கு, ஆசையாக சென்ற அண்ணன் மற்றும் அவரது தாயார் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

car accident near salem brother died, 3 injured

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னமணலி பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு மஞ்சுநாதன் என்ற மகன் உள்ளார். மஞ்சுநாதன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது பெரியப்பா மகளான, தங்கைக்கு திருமணம் என்பதால், கடந்த திங்கள்கிழமையன்று சொந்த ஊருக்கு வந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தியாகதுருவம் பகுதியில், பெரியப்பா மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இந்த திருமணத்திற்காக தங்களது சொந்த கிராமத்திலிருந்து, ஒரு காரில் சரஸ்வதி, மஞ்சுநாதன், உறவினர் முகிலன் ஆகியோர் புறப்பட்டனர். காரை அதே ஊரை சேர்ந்த டிரைவர் ஆனந்தகுமார் என்பவர் ஓட்டினார். எடப்பாடியில் இருந்து தியாகதுருவத்தை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆத்தூர், அப்பம்மசமுத்திரம் என்ற இடத்தில் 4 வழிச்சாலையில் கார் சென்றபோது, 2 வழிச்சாலை வந்தது. இதை கவனிக்காமல் ஆனந்தகுமார் காரை ஓட்டியதால் எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாலத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியது.

இந்த விபத்தில், கார் முன்பகுதி இருக்கையில் இருந்த மஞ்சுநாதன், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் உள்ள இருக்கையில் இருந்த, அவரது தாய் சரஸ்வதி உறவினர் முகிலன், டிரைவர் ஆனந்தகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் சரஸ்வதிக்கு 2 கால்களும் முறிந்தன. 3 பேரும் வலியால் கதறினர். அவர்களை, ஆத்தூர் புறநகர் போலீசார், பொது மக்கள் மீட்டனர். இந்நிலையில் திருமணத்திற்கு வேனில் பின்னால் வந்து கொண்டிருந்த ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள், கார் விபத்தில் சிக்கியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வேனை நிறுத்தி அங்கு சென்று பார்த்தனர். மஞ்சுநாதன் பலியாகி உள்ளதை கண்டு அவர்கள் கதறி அழுதனர். படுகாயம் அடைந்த சரஸ்வதி, முகிலன், ஆனந்தகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டடது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு, 3 பேரையும் மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #ACCIDENT #SALEM #ATHUR