‘விபத்தில் மயக்கமடைந்த இளம் பெண்களிடம்’.. ‘ஆம்புலன்ஸ் ஊழியர் செய்த அதிர்ச்சிக் காரியம்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 21, 2019 04:28 PM

திருவள்ளூர் அருகே ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

Ambulance employee steals chain from girl who met with accident

திருவள்ளூரைச் சேர்ந்த ராஜன் என்பவர் தனது உறவுக்காரப் பெண்களான லாவண்யா, சரண்யா ஆகியோருடன் நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தாமரைப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனம் மோதிய விபத்தில் ராஜன் உட்பட இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.

இதையடுத்து அந்தப் பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மயக்க நிலையில் லாவண்யாவும், சரண்யாவும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லாவண்யா மயக்கம் தெளிந்து எழுந்தபோது கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து உறவினர்கள் கேட்டபோது தங்களிடமிருந்து செயின், கொலுசு ஆகியவற்றை ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் வாங்கியதாக சரண்யா கூறியுள்ளார்.

அவர் கூறிய தகவலின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஊழியர் அருண்குமார் என்பவரைப் பிடித்து ராஜனின் உறவினர்கள் விசாரித்துள்ளனர். அப்போது அவர் உண்மையைக் கூறாததால் அவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து திருடிய தங்க செயினையும், கொலுசுக்கான பணத்தையும் அவர் திருப்பிக் கொடுத்துள்ளார். விபத்தில் மயக்கமடைந்த பெண்களிடமிருந்து ஆம்புலன்ஸ் ஊழியர் செயின், கொலுசு ஆகியவற்றை திருடிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #AMBULANCE #ACCIDENT #GIRLS #CHAIN #SHOCKING