‘ஓடவும் முடியல, ஒளியவும் முடியல’.. திருடப்போன வீட்டில் சென்னை இன்ஜினீயர் செஞ்ச காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருட சென்ற வீட்டில் இருந்து தப்பிக்க முடியாமல் இன்ஜினீயரிங் பட்டதாரி மொட்டை மாடியில் தூங்கிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை அடையாளம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என பிளம்பரை வீட்டுக்கு அழைத்துள்ளார். இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது மாடியில் ஒரு நபர் பதுங்கி இருந்ததைப் பார்த்த பிரபாகரன் அவரை யார் எனக் கேட்டுள்ளார். உடனே வேகமாக மாடியில் இருந்து கீழே இறங்கி அவர் ஓடியுள்ளார். ஆனால் வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவரால் தப்பி செல்ல முடியவில்லை.
இதனால் கையில் இருந்த ஸ்குருடைவர் வைத்து மிரட்டியுள்ளார். உடனே ப்ளம்பரின் உதவியுடன் அந்த நபரை பிரபாகரன் பிடித்துள்ளார். அப்போது அந்த நபர் தான் ஒரு பொறியியல் பட்டதாரி என்றும் வங்கி கடன், கடன் பிரச்சனை காரணமாக கொள்ளை அடிக்க வந்ததாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த நபரை மதுரவாயல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கொளத்தூரை சேர்ந்த முத்தழகன் என்பதும், ஆன்லைனில் உணவுகளை டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. வீட்டுச் சூழ்நிலை மற்றும் கடன் பிரச்சனை காரணமாக இப்பகுதியில் உணவு டெலிவரி செய்யும் இந்த வீடு தனியாக இருப்பதை கண்டறிந்து கொள்ளையடிக்க முயன்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஒரு பகுதியில் நிறுத்துவிட்டு வீட்டின் காம்பவுண்ட் சுவரின் மீது எகிறி குதித்து உள்ளே சென்றுள்ளார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கதவை உடைக்க முயன்றுள்ளார். ஆனால் உடைக்க முடியாததால், கதவை திறந்த பிறகு கொள்ளை அடித்துக்கொள்ளலாம் என மாடியிலேயே போதையில் தூங்கியுள்ளார்.
ஆனால் அவர் எழுவதற்கு பொழுது விடிந்துவிட்டதால் கீழே வர முடியாமல், மாலை வரை கொளுத்தும் வெயிலில் பதுங்கி இருந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பொறியியல் பட்டதாரி முத்தழகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்
