'டூட்டி முடிச்சிட்டு நடந்து வந்த பெண்'... 'சிறுவனை வைத்து பயிற்சி கொடுத்த இளைஞர்கள்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் லட்சுமி. இவர் துறைமுகத்தில் உள்ள மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இரவு வேலைகளை முடித்துவிட்டு சுமார் 8 மணி அளவில் பார்த்தசாரதி சாமி தெருவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது லட்சுமியை பின்னால் இருந்து பின்தொடர்ந்து கொண்டே வந்த வந்த இளைஞர் ஒருவர் அவரின் கழுத்திலிருந்த 3 சவரன் தங்க நகையைப் பறித்து விட்டுத் தப்பி ஓடினார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நிலைகுலைந்து போன அவர், சுதாரிப்பதற்குள் சிறிது தூரம் ஓடிய அந்த இளைஞன் மற்றொரு நபரிடம் சென்று தங்கநகையைக் கொடுத்துவிட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமி ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.
உடனே விசாரணையைத் தொடங்கிய ஐஸ் அவுஸ் போலீசார், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். திருவல்லிக்கேணியைச் சேர்ந்த விஜய் என்ற சொறி விஜய் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் என மூன்று பேர் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ''விஜய் என்ற சொறி விஜயும், சக்திவேலும் இருவரும் இணைந்து 17 வயது சிறுவனுக்கு எப்படி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட வேண்டும் என்பதற்காகப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அந்த சிறுவன் இந்த செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும்'' கூறியுள்ளார்கள்.
புகார் அளித்த 6 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளைக் கைது செய்த ஐஸ்ஹவுஸ் போலீசாரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.

மற்ற செய்திகள்
