“கொரோனா வந்துடுச்சு.. இனி பொழைக்க மாட்டேன்”.. கணவரிடம் இருந்து வந்த போன்.. தேடிச்சென்று ஷாக் ஆகி நின்ற போலீஸார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கணவர் ஒருவர் தனக்கு கொரோனா இருப்பதாகவும் உயிர் பிழைக்க மாட்டேன் என்றும் மனைவியிடம் கூறிவிட்டு காதலியுடன் வேறொரு மாநிலத்திற்கு சென்று குடித்தனம் நடத்தியுள்ள விஷயம் அம்பலமாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையைச் சேர்ந்த மனீஷ் மிஸ்ரா தனது மனைவியுடன் நவி மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு கொரோனா வைரஸ் பரவிவிட்டதாகவும், அதனால் தான் உயிர் பிழைக்க மாட்டேன் எனவும் கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார். இதனால் பதற்றமடைந்த மிஸ்ராவின் மனைவி தனது கணவரின் செல்போனுக்கு உடனடியாக மீண்டும் தொடர்பு கொள்ள, ஆனால் அதற்குள் மிஸ்ராவின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனது.
பின்பு காவல் நிலையத்தில் மிஸ்ராவின் மனைவி அளித்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் மிஸ்ராவின் செல்போன் சிக்னல் கடைசியாக காட்டிய இடத்துக்கு சென்றதுடன், அங்கு மிஸ்ராவின் பைக் ஹெல்மெட் இருப்பதை கண்டறிந்தனர். அத்துடன் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் ஒரு கார் ஏறி சென்ற காட்சி அதில் பதிவாகியிருந்ததையும் கண்டறிந்தனர்.
இதை வைத்து மத்திய பிரதேசம் விரைந்த மும்பை போலீஸாருக்கு, அங்குள்ள இந்தூரில் மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் மிஸ்ராவுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனியாக குடும்பம் நடத்த முடிவு செய்ததும், அதற்கென ஒரு திட்டம் தீட்டிய மிஸ்ரா, தனது மனைவியிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் தான் உயிர் பிழைக்க மாட்டேன் என்றும் அதனால் தற்கொலை செய்யப் போவதாகவும் கூறிவிட்டு, தனது கள்ளக்காதலியுடன் மத்திய பிரதேசம் சென்றதும் தெரியவந்தது.