‘நம்பி வீட்ல தங்க வச்சோம்’!.. ‘10 நாள் கழிச்சு கிடைச்ச துப்பு’.. சென்னையை பரபரக்க வைத்த குழந்தை கடத்தல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை 10 நாட்களுக்குள் மீட்டு பத்திரமாக குழந்தையின் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பப்லு என்பவர் சென்னை ராயபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள குடிசை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கட்டுமான பணிகளில் வேலை செய்து வரும் இவருக்கும் 3 மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 5ம் தேதியன்று வேலை விஷயமாக பப்லு சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றுள்ளார். அப்போது அசாம் மாநில வாலிபர் ஒருவருடன் பப்லுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாலிபர் வேலை தேடி வருவதாக பப்லுவிடம் கூறியுள்ளார்.
இதை நம்பிய பப்லு அவரை ராயபுரம் அழைத்து வந்து ஒன்றாக மது அருந்திவிட்டு வீட்டில் தங்க வைத்துள்ளார். அடுத்த நாள் மாலை வீட்டில் இருந்த பப்லுவின் 3 வயது பெண் குழந்தை மர்ஜினாவை கடைக்கு கூட்டிச் செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த நபர் திரும்பவே இல்லை.
குழந்தை கடத்தப்பட்டதை உணர்ந்த பெற்றோர் உடனே ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராயபுரம் ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் குழந்தையை தூக்கி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சுனில் என்பது தெரியவந்தது. உடனே குழந்தையை மீட்க தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடினர். குழந்தை கடத்தப்பட்ட அன்று கடத்தல்காரர் விட்டுச்சென்ற பையை சோதனை செய்தபோது, அதில் ஒரு செல்போன் நம்பர் கிடைத்துள்ளது.
உடனே அந்த நம்பருக்கு அழைத்தபோது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. தொடர்ந்து அந்த நம்பரை போலீசார் கண்காணித்து வந்தனர். மேலும் சுனில் இதற்கு முன்னதாக வேலை பார்த்து வந்த மயிலாப்பூர், அம்பத்தூர், கேளம்பாக்கம் என பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர். சுனிலின் சொந்த ஊரான அசாம் மாநிலத்துக்கும் சென்று போலீசார் சோதனை செய்துள்ளனர்.
இந்த சமயத்தில் ஏற்கனவே சுவிட்ச் ஆப் நிலையில் இருந்த செல்போன் ஆன் செய்யப்பட்டுள்ளது. உடனே அந்த நம்பருக்கு அழைத்து சுனில் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுனிலை கேட்டு அதே நம்பருக்கு மற்றொரு அழைப்பு வந்துள்ளது. அதில் ஒரு குழந்தை செங்கல்பட்டு மாவட்டம் நாவலூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மர்ஜினாவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை மீட்கப்பட்ட நிலையில் கடத்திய சுனில் இன்னும் சிக்கவில்லை. இந்த கடத்தல் சம்பவத்தில் சுனிலுடன் வேறு யாருக்கும் இருக்குமா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட 10 நாட்களுக்கு கண்டுபிடித்து கொடுத்த போலீசாருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.