'100க்கும் மேற்பட்ட கேமராக்கள்'... 'டியோ பைக்கில் இருந்த விநாயகர் ஸ்டிக்கர்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, ஈஞ்சம்பாக்கம், சோழமண்டல் ஆர்ட்டிஸ்ட் விலேஜில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருபவர் சிற்பி கருணாமூர்த்தி. இவரது மனைவி கீதா. இந்த தம்பதியர் வழக்கமாக இரவு நேரங்களில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதியன்று இரவு 9.30 மணியளவில் வீட்டிற்கு வெளியே நடைப்பயிற்சி மேற்கொண்டனர். அப்போது அவர்களை நோட்டமிட்ட இருவர் பின் தொடர்ந்து வந்து கீதாவின் கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முற்பட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கருணாமூர்த்தி, அவர்களோடு சண்டையிட்டு அவர்களைப் பிடிக்க முற்பட்டார்.
அப்போது வெளியில் நின்று நோட்டமிட்டுக் கொண்டிருந்த நபர், இருசக்கர வாகனத்தோடு உள்ளே வந்து முதியவரைத் தாக்கிவிட்டு சங்கிலியைப் பறித்துக் கொண்டு கீதாவைக் கீழே தள்ளிவிட்டு விட்டுத் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருணாமூர்த்தி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீலாங்கரை உதவி ஆணையர் விஷ்வேஷ்வரய்யா தலைமையில் உதவி ஆய்வாளர் தமிழன்பன், காவலர்கள் இன்பராஜ் மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தார்கள். ஆனால் இருள் சூழ்ந்து இருந்ததாலும், இருசக்கர வாகன பதிவெண்ணை வேப்பிலை வைத்து மறைத்திருந்ததாலும் சங்கிலி பறிப்பு கொள்ளையர்களைப் பிடிப்பதற்கு போலீசாருக்கு துப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் முயற்சியைக் கைவிடாத போலீசார், ஈஞ்சம்பாக்கத்திலிருந்து செம்மஞ்சேரி வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனையடுத்து கடந்த 6 மாதமாக விற்பனையான 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் விவரங்களைச் சேகரித்த போலீசார், இருசக்கர வாகனத்தில் விநாயகர் ஸ்டிக்கர் ஓட்டி இருப்பதை சிசிடிவியில் பார்த்ததை வைத்து விசாரணையைத் துரிதப்படுத்தினார்கள். அப்போது அந்த இருசக்கர வாகனமானது செம்மஞ்சேரி எட்டடுக்கு பகுதியைச் சேர்ந்த முகமது என்பவருடையது என்பதைக் கண்டறிந்து அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவரது தம்பியான இளஞ்சிறார் ஒருவர் நவமணி(எ) நட்ராஜ்(28) என்பவரோடு சேர்ந்து செயின் பறித்தது தெரியவந்தது.
உடனே சிறாரைக் கைது செய்த போலீசார் அவனைச் சிறையில் அடைத்தார்கள். மேலும் தன்னை போலீசார் தேடுகிறார்கள் என்பதை அறிந்த நவமணி சித்தாலபாக்கம், பள்ளிகரணை, காரப்பாக்கம் என இடத்தை மாற்றி போலீசாருக்கு போக்கு காட்டினார். ஒருகட்டத்தில் திருப்போரூர் அருகே பதுங்கியிருந்தவரைத் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் இவர் மீது கும்மிடிப்பூண்டியில் ஒரே நேரத்தில் மூன்று பேரை கொன்ற கொலை வழக்கு, 3 கஞ்சா வழக்கு, 2 அடிதடி வழக்கு, கொள்ளை வழக்கு என 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சம்பவம் நடந்து 20 நாட்களாகத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கிடைத்த சிறிய தடயத்தை வைத்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளார்கள். இதையடுத்து தனிப்படை போலீசாரை அடையார் துணை ஆணையர் விக்ரமன் நேரில் அழைத்துப் பாராட்டினார்.