"ஆன்லைன் மூலமாவே '2' லட்சம் வர 'லோன்' குடுக்குறோம்".. நம்பி தகவலை பகிர்ந்த 'நபர்'... இறுதியில் தெரிய வந்த அதிர்ச்சி 'பின்னணி'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அவரது புகாரில், 'கடந்த சில தினங்களுக்கு முன் டாட்டா கேபிட்டல்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து பெண் ஒருவர் என்னை அழைத்து பேசினார். அப்போது பேசிய அந்த பெண், தனிநபர் கடன் 2 லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் மூலமாகவே கடன் வாங்கலாம் என தெரிவித்தார். அதனை நம்பி நானும், ஆதார் மற்றும் வங்கி ஆவணங்களை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பினேன். அதன் பின் எனக்கு வந்த 'OTP' எண்ணையும் அவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். உடனடியாக எனது வங்கி கணக்கில் இருந்து 20,000 ரூபாய் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. பணம் பறிபோனது தொடர்பாக அவர்களிடம் கேட்ட போது எனது அழைப்பை துண்டித்தனர்' என புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அழைப்பு வந்த மொபைல் எண்ணை ட்ரேஸ் செய்த போது அந்த எண், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தது என தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல், அது ஒரு கால் சென்டர் எண் என்பதும் தெரிந்தது.
உடனடியாக, நாமக்கல் மாவட்டத்திலுள்ள அந்த போலி கால் சென்டருக்கு சென்று அதனை சுற்றி வளைத்த போலீசார், அங்கிருந்த பெண்கள் சிலர் மற்றும் அந்த கும்பலின் தலைவர்கள் இரண்டு பேரை பிடித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கால் சென்டர் பெயரில் போலியாக, +2 மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 8,000 முதல் 15,000 வரை சம்பளம் தருவதாக கூறி, அவர்களை பணிக்கு அமர்த்தி மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுவரை இந்த மோசடி கும்பல் சுமார் 30 பேரிடம் வரை மோசடி செய்ததும் அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து, அந்த கும்பல் சார்பாக மொத்தம் 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.