'பைக்குக்கு வழிவிட சொன்ன மாணவர்களை கத்தியால் குத்திய தந்தை, மகன்'... பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 20, 2019 01:17 PM

சென்னை அருகே பைக் செல்ல வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்தப்பட்ட மாணவர்களில் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

bike issues in chrompet chennai one school boy died

பம்மல் நாகல்கேணி பகுதியில் தனியார் கல்லூரியில் படிக்கும் நந்தா என்பவரும், பள்ளி மாணவர் விக்னேஷ்  என்பவரும் நண்பர்கள். கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு, குரோம்பேட்டையில் மாதா கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, பைக்கில் நண்பர்கள் இருவரும் சென்றிருந்தார்கள். போகும் வழியில் நாகல்கேணி பிரதான சாலையில், நித்தியானந்தம் என்பவர் வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்தார்.

அவரை நந்தாவும், விக்னேஷூம் தட்டிக்கேட்டதோடு, கையைப் பிடித்து இழுத்து தள்ளிவிட்டு சென்றதாக தெரிகிறது. பின்பு இருவரும் மீண்டும், அதே சாலை வழியாக வீட்டிற்கு திரும்பினர். அப்போது, இருவரையும் நித்தியானந்தமும், அவரது தந்தையும், பம்மல் நகர பா.ஜ.க. தலைவருமான மதன் என்பவரும் தடுத்து நிறுத்தி, இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் விக்னேஷிற்கு முதுகிலும், நந்தாவிற்கு தலையிலும் கத்தி குத்து விழுந்துள்ளது.

படுகாயம் அடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நந்தாவிற்கு 9 தையல்கள் போடப்பட்டது. படுகாயமடைந்த விக்னேஷ் ஆபத்தான நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கர் நகர் போலீசார், நித்தியானந்தம் மற்றும் அவரது தந்தை மதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மாணவர்களை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : #ATTACK #CHENNAI