'அண்ணே, அந்த குடும்பம் எப்படி'... 'வரன் கேட்டு வந்த வெளியூர் மக்கள்'... 'பற்ற வைத்த டீக்கடைகாரர்'... கடுப்பில் திருமணமாகாத இளைஞர்கள் வைத்த சுவாரசிய பேனர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமாகாத இளைஞர்கள் சிலரால் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக அரசியல் கட்சி கூட்டம் என்றால் பேனர் வைப்பார்கள். இல்லை திருமணம் என்றால் பேனர் வைப்பார்கள். ஆனால் சமீபகாலமாக இளைஞர்கள் வைக்கும் சில வித்தியாசமான பேனர்கள் சமூகவலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்று வருகிறது. அந்தவகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வைத்துள்ள பேனர் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே உள்ளது கரம்பயம் கிராமம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்குத் திருமண வரன் பார்க்கப் பலர் வெளியூரிலிருந்து வருவது வழக்கம். அந்த வகையில் அங்கு வரும் மக்கள். தாங்கள் வரன் பார்க்க வரும் குடும்பத்தைப் பற்றி அங்கு இருக்கும் சிலரிடமும், அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வரும் நபரிடமும் விசாரித்துள்ளார்கள்.
ஆனால் அவர்களோ சில அவதூறுகளைக் கூறி அந்த வரன்களை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். இதனால் பலரது திருமணம் தடைப்பட்டுப் போவதாகப் பிள்ளைகளின் பெற்றோர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட திருமணம் ஆகாத சில இளைஞர்கள் ஒன்று கூடி அப்பகுதியில் சோதனையை வெளிப்படுத்தும் விதமாக, ஆனால் யார் மனதையும் புண்படுத்தாமல் சுவாரஸ்யமான பேனர் வைத்துள்ளனர்.
அதில், ''கரம்பயத்தில் வந்து விசாரிக்கும் அனைத்து திருமண வரன்களையும் தடுத்து நிறுத்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி. இந்த பணியைச் செய்பவர்கள் சில பெண்கள், சில ஆண்கள் மற்றும் ஒரே ஒரு டீக்கடை வைத்திருப்போர் மட்டுமே. இவர்களது நற்பணி மேலும் தொடர்ந்தால் இனிவைக்கப்படும் விளம்பர பேனரில் தங்களுடைய பெயர், புகைப்படம் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிடப்படும். இப்படிக்குத் திருமண வரம் தேடும் இளைஞர்கள், கரம்பயம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணம் ஆகாத இளைஞர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் வைத்துள்ள இந்த பேனர் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
