'எமலோகத்தில் ஹவுஸ்புல்...' 'எல்லோரும் வீட்ல இருங்க...' 'இருகரம் கூப்பி' கெஞ்சும் 'எமன்...' 'நூதன விழிப்புணர்வு பேனர்...' "வச்சது யார் தெரியுமா?..."
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், "எமலோகத்தில் இடமில்லை, அனைவரும் வீட்டிலேயே இருங்கள்" என நூதன முறையில் பேனர் வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் இந்த ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் பொதுமக்கள் இதனைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இருச்சக்கர வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இதுவரை 45 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு கட்டத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக திண்டுக்கல் இருந்தது. தற்போது அங்கு தொற்று ஏற்படுவது குறைந்தாலும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமல் வெளியே சுற்றி வருவது அதிகரித்து வருவதால் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு போலீசார் பலவகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வைத்துள்ள விளம்பர பேனர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ‘ஹவுஸ்புல்’ எமலோகத்தில் இடமில்லை என்றும், எமதர்மன் எருமையில் அமர்ந்து இருகரம் கூப்புவது போல படம் போட்டு, ‘தயவு செய்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்’ என்று கேட்டுக்கொள்வது போலவும் பேனர் வைத்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
