'ஒரு லெட்டர் கூட வரல...' 'எனக்கு பயங்கர மன உளைச்சலுங்க...' 'அதான் இப்படி ஒரு பிளக்ஸ் பேனர் அடிச்சேன்...' - இளைஞரின் ஆதங்கம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு வேலை கிடைக்காத மனவிரக்தியில் வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு பிளக்ஸ் பேனர் வைத்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த கே.ஆனந்தராஜ் என்பவர் நேற்று (14.02.2021) புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே அவரின் போட்டோவுடன் ஒரு பிளக்ஸ் பேனர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த பேனரில், 'புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெற்றிகரமாக 24 ஆண்டு பதிவு மூப்பை பதிவு செய்தும் எந்த வேலையும் கிடைக்கவில்லை. நலம் விசாரித்துக்கூட ஒரு கடிதமும் வந்ததில்லை' என தன் வேலைவாய்ப்பு பதிவு எண்ணையும் குறிப்பிடுள்ளார்.
இதுகுறித்து செய்தி நாளிதழ் ஒன்றிற்கு ஆனந்தராஜ் கூறும் போது, 'நான் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். நான் படிக்கும் போதே அரசு வேலைக்காக 1997-ல் எஸ்எஸ்எல்சியையும், 1999-ல் பிளஸ் 2 படித்து முடித்து புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தேன்.
அதன் பிறகும் ஒரு ஆசிரியர் பயிற்சியை முடித்து அதையும் பதிவு செய்தேன். ஆனால் இதுநாள் வரை எந்த வேலையும் வரவில்லை. என்னை போன்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள் கஷ்டப்பட்டு படிப்பது ஒரு அரசு வேலைக்காக தான்.
படிப்போடு நின்றுவிடாமல் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்து அதையும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு ஓட்டுநர் பணியாவது கிடைக்கும் என்று காத்திருந்தும் வேலை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கும் இங்கு வழியில்லை.
இப்போது நான் குறைந்த கூலிக்கு தனியார் வாகனம் ஓட்டி, குடும்பத்தை நடத்தி வருகிறேன். வேலை கிடைக்காத கடும் மன உளைச்சலில் தான் இவ்வாறு செய்தேன்' எனக் கூறியுள்ளார்.