'அப்டியெல்லாம் விட முடியாது'.. 'பேனர் சரிந்து சுபஸ்ரீ பலியான விவகாரம்'.. 'அதிமுக பிரமுகர் வீட்டில் நோட்டீஸ்'!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 27, 2019 11:08 AM
பேனர் விழுந்ததால் என்ஜினியர் சுபஸ்ரீ பலியான வழக்கில் அதிமுக பிரமுகர் வீட்டில் போலீஸார் நோட்டீஸ் ஒட்டியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை குரோம் பேட்டையை அடுத்த நெமிலிச்சேரி பவானி நகரைச் சேர்ந்த ரவி என்பவருடைய 23 வயது மகளான சுபஸ்ரீ, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 12-ஆம் தேதி பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சென்றபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகரின் இல்லத் திருமண வரவேற்பு பேனர் சரிந்து விழுந்ததால், லாரியில் சிக்கி பலியானார்.
இதனால் லாரி டிரைவர் முதல் குற்றவாளியாகவும், திருமண வரவேற்பு பேனர் வைத்திருந்த ஜெயகோபாம் இரண்டாவது குற்றவாளியாகவும் பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ஜெயகோபால் மற்றும் அவரது மைத்துனர் மேகநாதன் இருவரும் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி, ஜெயகோபாலின் வீட்டில் போலீஸார் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அதோடு, பேனர் விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில், பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சுபஸ்ரீயின் பெற்றோரைப் பார்த்து ஆறுதல் சொன்ன விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ‘எனக்கு 27 வயதாகிறது. என்னை உங்க மகனாக நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று ஆறுதல் கூறியதோடு, பேனர் விவகாரத்தில் உரிய நடவடிக்கையை யாராக இருந்தாலும் தமிழக அரசு எடுக்கும் என கூறிவிட்டு வந்தார்.