'பொது' சொத்த சேதப்படுத்தி இருக்கீங்க ... 'நஷ்டஈடு' குடுங்க, இல்லைன்னா ... லக்னோவில் புகைப்படங்களுடன் வைக்கப்பட்ட சர்ச்சை பேனர்கள் !

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Mar 09, 2020 12:58 PM

பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததன் பெயரில் சி.ஏ.ஏ போராட்டக்காரர்கள் நஷ்ட ஈடு கட்ட வேண்டும் என்ற அறிவிப்புடன் அனைவரின் முகவரி மற்றும் பெயர்களுடனான பேனர்கள், லக்னோவின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.

Banners with CAA protestors list in Lucknow creates controversy

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ நகரத்தில் வன்முறை நிகழ்ந்த நிலையில் பல்வேறு பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில் லக்னோவின் பல பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரிகளுடன் 'அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக நீங்கள் நஷ்ட ஈடு கட்ட வேண்டும். இல்லையெனில் உங்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

பொது சொத்தை சேதப்படுத்தியதற்கான வழக்கில் கைது செய்யப்பட்ட சிலர் தற்போது ஜாமீனில் இருந்து வரும் நபர்களின் புகைப்படமும் பேனர்களில் இடம்பெற்றுள்ளன. இதனைக் கண்ட பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் சமூக செயற்பாட்டாளரும் காங்கிரஸ் பிரமுகருமான சதாஃப் ஜப்பார், வழக்கறிஞர் முகமது சோகைப், நடிகர் தீபக் கபிர், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர்.தராபூரி ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இது குறித்து சதாஃப் ஜப்பார் கூறுகையில், 'போராட்டத்தில் ஈடுபட்ட நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம். சிலர் ஜாமீனில் வெளியில் உள்ளோம். பொது சொத்துக்களை சேதப்படுத்தியதன் பெயரில் எங்களுக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் எங்களது பெயர் மற்றும் முகவரியை இப்படி பொதுவெளியில் வெளியிட என்ன காரணம் உள்ளது?' என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிலர் நீதிமன்றம் தீர்ப்பளிக்காமல் எப்படி பொதுவெளியில் எங்களது தகவல்களை வெளியிட முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொது சொத்துக்களை சேதப்படுத்தியதன் பெயரில் போராட்டக்காரர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படும் என அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இன்னும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், போராட்டக்காரர்களின் புகைப்படம் மற்றும் முகவரியுடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Tags : #LUCKNOW #BANNER #CAA