‘ஓட்டுக் கேட்டு ஊருக்குள்ள வர அனுமதியில்ல’!.. எந்த கட்சி கொடியும் கிடையாது.. ஆச்சரியப்பட வைத்த கிராமம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசியல் கட்சி கொடிகள், பேனர்கள் என எதுவுமே இல்லாத ஆச்சரிய கிராமம் மதுரை அருகே உள்ளது.

மதுரை அருகே உள்ள ஒத்தவீடு கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறைகளாக அரசியல் கட்சிக் கொடிகள், பேனர்கள், போஸ்டர்கள் என எதற்குமே அனுமதியில்லை. அதேபோல் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவும் கிராமத்துக்குள் அனுமதி இல்லை என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து தெரிவித்த அக்கிராம மக்கள், திருமணம், திருவிழா என எந்தவொரு நிகழ்ச்சிக்கும் இங்கு போஸ்டர் ஒட்டவோ, பேனர் வைக்கவோ அனுமதி இல்லை. ஏனென்றால் இதனால் எங்களுக்குள் பிரச்சனை வந்து ஒற்றுமை சிதைந்து விடாக்கூடாது என்பதனால்தான். 100 ஆண்டுகளுக்கு மேலாகவே இதை கடைபிடித்து வருகிறோம்.
அதேபோல் எங்கள் ஊரில் எங்குமே கட்சி கொடிகள் இருக்காது. அவரவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நபர்களுக்கு வாக்களித்துக் கொள்ளலாம். எந்த கட்சி சார்பாகவும் ஊருக்குள் பிரச்சாரத்துக்கு வர அனுமதி கிடையாது. ஊருக்கு வெளியே கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்துவோம். தனிப்பட்ட முறையில் ஊருக்குள் வந்து ஓட்டுகேட்க அனுமதி இல்லை’ என தெரிவித்துள்ளனர்.
இதைவிட சிறப்பம்சம் என்னவென்றால், தங்களது கிராம மக்கள் யாரும் ஓட்டுக்கு பணம் வாங்குவதில்லை என்றும், பணம் கொடுக்க யாரையும் விடமாட்டார்கள் என்றும் பெருமையுடன் தெரிவிக்கின்றனர். ஊரில் உள்ள பேருந்து நிழற்குடையிலேயே, ‘இந்த கிராமத்தில் எங்கும் சுவரொட்டி ஒட்டக்கூடாது’ என எழுதப்பட்டுள்ளது. மேலும் தங்களது ஊரில் பல அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
News Credits: Puthiyathalaimurai

மற்ற செய்திகள்
