‘இளம்பெண் சுபஸ்ரீ பலியான வழக்கில்’... ‘இருவாரங்களுக்குப் பின்னர்’... 'முன்னாள் கவுன்சிலர் கைது'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Sep 27, 2019 06:53 PM
சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ பேனர் விழுந்து உயிரிழந்த வழக்கில் தேடப்பட்டு வந்த, முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த 12-ம் தேதி, சாலையில் இளம்பெண் சுபஸ்ரீ, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னாள் கவுன்சிலரான ஜெயகோபாலின் இல்லத் திருமண விழாவையொட்டி, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர், சுபஸ்ரீயின் மீது விழுந்தது. இதில் அவர் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி, அவர்மீது ஏறியதில், இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வந்தநிலையில், பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் தலைமறைவானார்.
அவரை கைதுசெய்ய ஏன் இவ்வளவு தாமதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஒகேனக்கல் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுமார் இருவாரங்களுக்குப் பின்னர், கிருஷ்ணகிரியில் ஜெயகோபால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.