'அக்கா' நந்தினியைத் தொடர்ந்து, TASMAC-ஐ எதிர்த்த 'தங்கை' நிரஞ்சனா.. அதிரடியாக் கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jul 08, 2019 12:04 PM
தமிழக அரசு ஏற்று நடத்தும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் பேசியதாக சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மிக அண்மையில், அவரது தந்தையுடன் சேர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி நந்தினிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக ஜூன் 27-ஆம் தேதி மதுரை காவல்துறையினரால் நந்தினியும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நந்தினியின் சகோதரியும், 5-ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நந்தினியின் தங்கை நிரஞ்சனா கைது.
நேற்று மதியம் 1.30 மணிக்கு மதுரை சட்டக்கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்க இருந்த நிலையில், தற்போது *போலீஸ் வீட்டிற்கே வந்து நிரஞ்சனாவை ( நந்தினியின் தங்கை) வலுகட்டாயமாக கைது செய்து அழைத்து சென்றது. pic.twitter.com/dUm5LVbU8Q
— Mani kandan (@Manikandantkrg1) July 8, 2019
முன்னதாக நந்தினி கைது செய்யப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நந்தினியின் தங்கை நிரஞ்சனா பேசிய வீடியோ வைரலானது. அதில், ‘ஐபிசி செக்ஷன் 328-ன் படி போதைப்பொருள் விற்பது கடுமையான குற்றம். உள்நோக்கத்துடன் இந்த குற்றத்தை செய்பவர்களை 10 ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்கலாம். ஆனால் இதை எதிர்த்து கேட்ட என் அக்கா நந்தினியையும் அப்பாவையும் கைது செய்துள்ளனர். இவ்விஷயத்தில் அரசாங்கமும் நீதிமன்றமும் இணைந்து கூட்டாக செயல்படுகிறது. இதை எதிர்த்து ஜூலை 8-ஆம் தேதி திங்கள் அன்று மதுரை சட்டக் கல்லூரி முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன்’ என்று அறிவித்திருந்தார்.
இந்த வீடியோவில் நிரஞ்சனா பேசிய விதம்தான் அவர் மீதான இந்த கைது நடவடிக்கைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
