'சொல்லி பாத்தேன் கேக்கல'... 'தம்பி'யை கொடூரமாக கொன்ற 'அண்ணன்' ... அதிரவைக்கும் காரணம் !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 26, 2019 10:14 AM

பட்டியிலின சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த தம்பியை, அண்ணனே கொடூரமாக கொன்ற சம்பவம் மேட்டுப்பாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man murdered his own brother for love marriage in Coimbatore

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியியை சேர்ந்தவர் கனகராஜ். இவரும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கனகராஜ் வீட்டிற்கு சென்ற பிரியா, தன்னை ததிருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் இருவரின் காதலுக்கு கனகராஜ் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் பிரியா பட்டியலினத்தை சேர்ந்த பெண் எனவே, திருமணத்திற்கு சம்மதிக்க முடியாது என கனகராஜின் அண்ணன் வினோத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சனை எழுந்த வண்ணம் இருந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, மீண்டும் கனகராஜ் வீட்டிற்கு சென்ற பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் கனகராஜ் பெற்றோர் ஒரு போதும் திருமணத்திற்கு சம்மதிக்க முடியாது என கூற, கனகராஜ் வீட்டை விட்டு வெளியேறி பிரியாவுடன்  சேர்ந்து சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் தனி குடும்பம் நடத்தினார். இது கனகராஜின் அண்ணன் வினோத்திற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நான் எவ்வளவோ சொல்லியும் தம்பி இப்படி செய்து விட்டானே என்ற கோபத்தில் இருந்த வினோத், கனகராஜ் குடியிருந்த வீட்டிற்கு சென்று அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டினார்.

இந்த கோர தாக்குதலில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வர்ஷினி ப்ரியா உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் 2 தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக உள்ள கனகராஜின் அண்ணன் வினோத்தை தேடி வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த  வினோத்குமார் இன்று காலை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பட்டியலின பெண்ணை காதலித்தற்காக அண்ணனே தம்பியை கொடூரமாக வெட்டி ஆணவ கொலை செய்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #HONOURKILLING #POLICE #MURDER #COIMBATORE #METTUPALAYAM