'இப்ப என்ன பண்ணுவீங்க?'.. டிராஃபிக் போலீஸிடம் வாகன ஓட்டி செய்த விநோத காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Jul 02, 2019 11:07 PM
சென்னையை அடுத்துள்ளது கோவிலம்பாக்கம் ஈச்சங்காடு சந்திப்பு. இங்கு வாகன சோதனையில் மடிப்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு மது போதையில் வந்த 42 வயதான செந்தில்குமார் என்பவரை கனகராஜ் ஹெல்மெட் போடாததன் காரணமாக தடுத்து நிறுத்தியுள்ளார்.
மேலும் செந்தில்குமாருக்கு அபராதம் விதிப்பதற்காக இ-சலான் கருவியை பயன்படுத்த முயற்சித்துள்ளார் கனகராஜ். ஆனால் அப்போது தான் செந்தில்குமார் மதுபோதையில் இருந்ததும், கனராஜூக்கு தெரியவந்தது. இதனையடுத்து, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், ஹெல்மெட் போடாததற்குமாக 2 வழக்குகளை பதிவு செய்யும் விதமாகவும், அவை இரண்டிற்கும் அபராதமும் கட்டும் விதமாகவும் கனகராஜ் இ-செலானில் பதிவு செய்ய போனார்.
ஆனால் அதற்குள் டென்ஷனான செந்தில்குமார், ‘இந்த கருவி இருந்தால்தானே..என் மீது 2 வழக்குகள் போடுவீர்கள். நான் அபராதம் கட்ட வேண்டும்’ என்று சொல்லும் விதமாக அந்தக் கருவியை வெடுக்கணை பிடிங்கிக் கொண்டு சரசரவென அந்த இடத்திலிருந்து பைக் மூலம் தப்பித்துவிட்டார். உடனே அடுத்து உள்ள பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்த கனகராஜ் அவர்களின் உதவியுடன் கூலித்தொழிலாளியான செந்தில்குமாரை விரட்டி பிடித்தனர்.
குடிபோதையில் ஒரு நாள் முழுவதும், காவல் நிலையத்தில், ‘நான் யார் தெரியுமா? என்னை எதற்காக கைது செய்து வைத்திருக்கிறார்கள்?’ என்று பெரும் ஆர்ப்பாட்டமும் அலப்பறையும் செய்து போலீசாருக்கு தொல்லை கொடுத்துள்ளார் செந்தில்குமார். ஆனால் காலையில் மது போதை தெளிந்ததும், ‘அய்யா.. சாமி... தெரியாம பண்ணிட்டேன்.. தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று மன்றாடியுள்ளார். ஆனாலும் செந்தில்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.