‘கணவரைக் கைது செய்ய வேண்டாமெனக் கேட்ட..’ கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Jun 21, 2019 05:18 PM
மதுரையில் கர்ப்பிணியைத் தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையிலுள்ள முனியாண்டிபுரம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ரேஷன் கடை சுவரின் மீது அமர்ந்திருந்த இளைஞர்களைக் கீழே இறங்குமாறு போலீஸார் கூறியுள்ளனர். இதனால் அந்த இளைஞர் கும்பலுக்கும் போலீஸாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அந்த கிராமத்தைச் சேர்ந்த காளஸ்வரன் என்பவரை போலீஸார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுப்பதற்காக வந்த அவரது மனைவி சித்ரா கணவரைக் கைது செய்ய வேண்டாமெனக் கேட்டுள்ளார். அப்போது கர்ப்பிணியான அவரை சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 7 மாத கர்ப்பிணியான மனைவியை வயிற்றில் ஜான்சன் காலால் உதைத்ததாக அவருடைய கணவர் கூறியுள்ளார். இதில் காயமடைந்த சித்ரா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய 5 போலீஸார் மற்றும் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவமனை டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்ககோரி அவரது உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் அளித்த புகாரின் பேரில் காளஸ்வரன் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.