'அவளது மரணத்தில்தான் இது நடக்கணும்னு இருக்கு'.. விபத்தில் மனைவியை பறிகொடுத்த கணவர் செய்த உருக்கும் காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 26, 2019 11:15 AM

கோவையை அடுத்த கணுவாய் பகுதியைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் மற்றும் மருத்துவர் ரமேஷ். இவரது மனைவி ஷோபனா, கோவை ஆனைக்கட்டியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மகள் சாந்தலாதேவியை பள்ளியில் இருந்து அழைத்துவருவதற்காக, கணுவாயில் இருந்து ஸ்கூட்டியில் செனறுள்ளார்.

man buries his wife near tasmac after she dead in an accident

மகள் சாந்தலா தேவியை அழைத்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பி வந்துகொண்டிருந்தபோதுதான் அந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. ஸ்கூட்டியில் வந்த ஷோபனா மற்றும் சாந்தலாதேவி ஜம்புகண்டி பகுதியை அடைந்தபோது, இவர்களுக்கு எதிரில் அசுர வேகத்தில், முழு போதையில் பைக் ஓட்டி வந்த இளைஞர்கள் அடித்துத் தூக்கியுள்ளனர். இதில் பரிதாபமான நிலையில், ஷோபனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர்களது மகள் சாந்தலா தேவி பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக போராடி வருகிறார். இந்த நிலையில் பதறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்ற ரமேஷ், கதறி அழதுள்ளார். ஜம்புகண்டியில் மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படும் டாஸ்மாக்கில் பலரும் குடித்துவிட்டு அங்கிருந்து வாகனம் ஓட்டுகிறார்கள் என பின்னர் தெரியவந்தது.

அப்படி வந்த நபர்கள்தான் இந்த விபத்துக்குக் காரணம் என அறிந்த ரமேஷ், அதே வலியுடனும் ரணத்துடனும் மனைவியின் சடலத்தை வைத்துக்கொண்டு 4 மணி நேரமாக டாஸ்மாக்கை மூடச்சொல்லி போராடியுள்ளார். பின்னர் அரசு அதிகாரிகள் வந்து டாஸ்மாக் மூடப்படுவதாக உத்திரவாதமளித்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், தனது மனைவி ஷோபனாவின் சடலத்தை ரமேஷ், டாஸ்மாக்கை ஒட்டி, விபத்து நடந்த இடத்திலேயே அடக்கம் செய்துள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், ‘எவ்வளவோ எதிர்ப்புகளை மீறிச் செயல்படும் இந்த டாஸ்மாக், என் மனைவியின் இறப்பில்தான் மூடப்பட வேண்டும் என்றுள்ளது. என் மனைவியின் உயிர் அப்பகுதி பழங்குடி மக்களுக்காக என நினைத்துக்கொள்கிறேன். அவர்கள் வழக்கப்படி விபத்து நடந்த இடத்தில், டாஸ்மாக்கை ஒட்டி புதைக்கிறேன்’ என்று நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டு இரவு அஞ்சலி செலுத்திவிட்டு, காலையில் அவ்விடத்திலேயே அடக்கம் செய்துள்ளனர்.

Tags : #ACCIDENT #TAMILNADU #TASMAC