'ஃப்ரண்ட்ஸோட சேர்ந்து அந்த மாதிரி படம் பாத்துட்டோம்.. அரஸ்ட் பண்ணிடாதீங்க சார்!'.. கலங்கிய 2 கல்லூரி மாணவிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 19, 2019 06:45 PM
கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் ஏ.டி.ஜி.பி ரவி காவலன் செயலி பற்றி விழிப்புணர்வு உரையை ஆற்றியதோடு, பெண்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட அந்த செயலியில் உள்ள சிரமங்கள் விரைவில் களையப்படும் என்று கூறினார்.
சமீபத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் வருத்தத்தைத் தருவதாகக் கூறிய ஏ.டி.ஜி.பி ரவி, அந்த நிகழ்ச்சிக்கு வரும்முன், குழந்தைகள் ஆபாசப் படங்களை பார்த்து, பகிர்ந்து, தரவிறக்கம் செய்த முக்கிய 30 பேர் கொண்ட பட்டியலை கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டுதான் வந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும் பேசியவர், ‘அண்மையில் என்னிடம் வந்த 2 கல்லூரி மாணவிகள், தயங்கித் தயங்கி ஏதோ சொல்ல வந்தார்கள். விசாரித்ததில், நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாய் சில ஆபாசப்படங்களை பார்த்துவிட்டதாகவும், இதற்காக தங்களை கைது செய்துவிடுவார்கள் என்கிற பயத்தில் கல்லூரிக்கே போக பயமாக இருப்பதாகவும் கூறினார்கள். நான் அவர்களை ஆசுவாசப்படுத்தி இந்த பருவத்தில் அப்படியான படங்களை நீங்கள் பார்த்ததில் தவறில்லை. இனியும் பார்க்க வேண்டாம்’ என்று கூறியதாக தெரிவித்தார்.
மேலும் பேசியவர், ‘அந்த பெண்களிடம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவும் வேண்டாம், காரணம் இந்த வயதில் சமூகவலைதளங்களின் ஆதிக்கம் உங்களிடத்தில் அதிகளவில் இருக்கும். எல்லார் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கின்றன என்று கூறினேன். யதேச்சையாக யாராவது உங்களுக்கு வீடியோக்கள், படங்களை அனுப்பி, அதை நீங்கள் பார்த்திருக்கலாம். படிக்கும் வயதில் இவை கவனச்சிதறலை உண்டாக்கும். ஆக, நீங்கள் பார்த்ததற்காக உங்களை யாரும் ஒன்றும் செய்யப் போவதில்லை. தெரிந்தோ தெரியாமலோ பார்த்துவிட்டீர்கள். அதை மறந்துவிடுங்கள் என்று கூறிய பின்னரே நிம்மதியாக சென்றார்கள்’ என்று குறிப்பிட்டார்.
ஏடிஜிபி ரவி கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த அந்தப் பட்டியலில் 10 பேர் 45 வயது முதல் 60 வயது வரையிலானவர்கள் என்றும், சமூகத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.