'காணாமல் போன மகன்'... 'தேடி அலைந்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'சொந்த அண்ணனால் நேர்ந்த கொடூரம்'... 'நீதிமன்றம் கொடுத்த தண்டனை'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 21, 2020 02:03 PM

தேனியில் தம்பியை கொலை செய்து புதைத்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாக தாயிடம் கூறி அதிர்ச்சி அடைய வைத்த அண்ணனுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.

Elder Brother killed his brother over the Property issue

தேனி சிவாஜி நகரை சேர்ந்தவர் ராஜாமணி (59). இவருக்கு 3 மகன்கள். மூத்த மகன் பாண்டியராஜன் (40) ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். 2-வது மகன் தனபாண்டி (31). கடைசி மகன் சுந்தரபாண்டி (27). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், மூத்த மகன் பாண்டியராஜனுக்கும், நடு மகன் தனபாண்டிக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது தனபாண்டியை பாண்டியராஜன் தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் தனபாண்டி புகார் அளித்தன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், அண்ணன்கள் இடையே பிரச்சனை நடந்ததை அறிந்த தம்பி சுந்தரபாண்டி, மூத்த அண்ணன் பாண்டியராஜனின் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியராஜன், தம்பி என்றும் பாராமல் சுந்தரபாண்டியை தாக்கியதுடன், கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து, பிணத்தை தேனியில் உள்ள மயானத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டார். கடைசி மகன் சுந்தரபாண்டியை காணாமல், அவருடைய தாய் ராஜாமணி பதறிப் போனார்.

மகன் கிடைக்காத அவர், பின்னர் பாண்டியராஜன் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது, சுந்தரபாண்டிக்கு தீராத நோய் இருந்ததாகவும், அதனால் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால் உடலை அடக்கம் செய்துவிட்டதாகவும் பாண்டியராஜன் கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராஜாமணி தேனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மயானத்தில் புதைக்கப்பட்ட சுந்தரபாண்டி உடலை போலீசார் தோண்டி எடுத்து, அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில் பாண்டியராஜன், சுந்தரபாண்டி கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்ததும், தனது தாயிடம் அவர் நாடகமாடியதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்ற இந்த சம்பவத்தின் வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில், தம்பியைக் கொலை செய்த குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனையும், மேலும், ஆதாரங்கள் மறைக்கப்பட்டதற்காக கூடுதலாக 7 ஆண்டு தண்டணையும், ஆக மொத்தம் 21 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.

சிறைத் தண்டனையுடன் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் 2 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து தண்டனை பெற்ற பாண்டியராஜனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மற்றொரு தம்பி தனபாண்டியை பாண்டியராஜன் கொலை செய்ய முயற்சித்த வழக்கு, இதே நீதிமன்றத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MURDER #THENI #BROTERS #MOTHER