'ரிசல்ட் வந்த உடனே குரூப்ல மெசேஜ் வரும்'... 'ஒரே ஒரு 'சீட்டு' தான்... ஆனா, அது அவ்ளோ ஈஸி இல்ல'... ஸ்டேட் விட்டு ஸ்டேட்... 'வாட்ஸ் அப்'பில் லாட்டரி சீட்டு வியாபாரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Mar 11, 2020 06:05 PM

வாட்ஸ் அப் குரூப் மூலம் லாட்டரி விற்பனை செய்த 5 பேரை மாறுவேடத்தில் சென்று காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 person who sold lottery tickets illegally arrested in madurai

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளை அரசு தடை செய்துள்ள நிலையில், கேரளாவை ஒட்டிய மாவட்டங்களில் சட்டத்துக்குப் புறம்பாக லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. கேரளாவில் இருந்து தேனி வழியாக மதுரைக்கு தினமும் கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகளை வாங்கி குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விற்பனை செய்யும் கும்பல் பரவலாக மதுரையில் உள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களை பிடிக்க மதுரை மாவட்ட போலீஸார் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் லாட்டரி விற்பனை நடப்பதாக அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் நிதிஷ்குமாருக்கு வந்த தகவலைத் தொடர்ந்து மாறுவேடத்தில் அங்கு சென்ற போலீசார் தீவிரமாக கண்காணித்துள்ளனர்.

அச்சமயம், அங்கு வந்த ஒரு நபர் நீண்ட நேரமாக செல் போனை நோண்டிக் கொண்டு இருந்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரை நோக்கி மேலும் சிலர் நெருங்கி வந்தனர். அதன் பின்பு, அவர்கள் மறைத்து வைத்திருந்த லாட்டரி சீட்டுகளைக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொண்டனர்.

இதைப்பார்த்த போலீஸார், உடனடியாக சென்று அந்த கும்பலை மடக்கி பிடித்தனர். அப்போது, அவர்களிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்தது. கள்ள லாட்டரி சந்தையில் கொடிகட்டி பறக்கும் மதுரை சமயநல்லூரை சேர்ந்த சப்பாணி மற்றும் வேல்முருகன், காமாட்சி, சரவணன், ரவிக்குமார் ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் 28,000 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், போலீஸ் விசாரணையில் அவர்களிடமிருந்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. கேரளாவில் இருந்து தினமும் லாட்டரி சீட்டுகளை கட்டுக்கட்டாக வாங்கி வரும் சப்பாணி, அவற்றை அலங்காநல்லூர், வாடிப்பட்டி, சமயநல்லூர், சோழவந்தான் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு தினமும் வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்காக வாட்ஸ்அப் குரூப் ஒன்றை தொடங்கிய சப்பானி, தினமும் லாட்டரி சீட்டு வரும் நேரம், அதை பெற்றுக் கொள்ளும் நேரம் என அனைத்து தகவல்களையும் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி தனது வியாபாரத்தை சிறப்பாகச் செய்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு லாட்டரி சீட்டுக்கும் தனக்கு கமிஷனாக 30 ரூபாய் பெற்றுக்கொண்ட அவர், அன்றன்றைக்கு இணையத்தில் வெளியாகும் முடிவுகளை உடனுக்குடன் தனது வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்து வாடிக்கையாளர்களுக்கு முடிவுகளை தெரிவிப்பதிலும் வேகம் கட்டியுள்ளார்.

சப்பாணிக்கு தினமும் கேரளா லாட்டரி சீட்டு கிடைத்தது எப்படி, இங்கு அவர் விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது அவரிடத்தில் லாட்டரி சீட்டுகளை தினமும் கொண்டு சேர்ப்பது யார், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கட்டுக்கட்டாக லாட்டரி சீட்டுகளை அனுப்பிவைக்கும் ஏஜென்ட் யார் என்பது பற்றிய விரிவான விசாரணையை அலங்காநல்லூர் போலீசார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : #MADURAI #LOTTERY #WHATSAPP