'11 குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியை சுகந்தி'.. 9 குழந்தைகளுடன் மூழ்கிய சோகம்.. 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 03, 2019 06:47 PM
கத்திரிப்புலம் அருகே கடந்த 2009, டிசம்பர் 3-ஆம் நாள், பனையடிகுத்தகை கோவில் குளத்தில் பள்ளி வேன் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. இதில், பள்ளி ஆசிரியை சுகந்தி (21), மற்றும் 20 பள்ளி குழந்தைகள் குளத்தில் விழுந்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் நாகக்குடையான் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் அன்னலட்சுமி தம்பதியரின் 21 வயது மகளான சுகந்தி (2009-ஆம் ஆண்டுப்படி) ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தபோது நிகழ்ந்த இந்த விபத்தில் 11 குழந்தைகளை தனி ஒருத்தியாக கரையேற்றி காப்பாற்றிவிட்டு, மீதமிருந்த 9 குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது பரிதாபமாக, குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். அவருடன் 9 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கரியாப்பட்டினம் போலீஸார் விசாரித்து வேன் டிரைவர் மகேந்திரன் என்பவரை அப்போது கைது செய்தனர். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுகந்தி மற்றும் இறந்துபோன பள்ளி குழந்தைகளின் நினைவாக மணிமண்டபம் ஒன்றும் எழுப்பப்பட்டது. எனினும் சுகந்தியின் பெற்றோர் கூலி வேலை செய்து பிழைத்து வந்த நிலையில் அவர்களது குடிசை கடந்த வருடம் கஜா புயலில் சரிந்தது. பல அரசுகள் நிவாரணங்களை அறிவித்தும் சில அரசியலாளர்கள் உதவிகள் செய்தும், எனினும் ஒன்றும் சரிவர கிடைக்காத நிலையில் இருந்ததாக சுகந்தியின் பெற்றோர் கடந்த வருடம் தெரிவித்தனர்.
சுகந்தியின் தியாகம் சரிவர கண்டுகொள்ளப்படாததாகவும் பலர் கருத்து தெரிவித்த நிலையில், இன்று சுகந்தியின் நினைவுநாளை நாகை மக்கள் அனுசரித்தனர்.