VIDEO: வாழ்க்கை ஒரு 'வட்டம்' பாஸ்... அன்னைக்கு 'பாகிஸ்தானை' பார்த்து சிரிச்சவங்கலாம்... 'இதையும்' கொஞ்சம் பாருங்க... வறுக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று நடைபெற்ற U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-வங்க தேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்க தேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 47.2 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து களமிறங்கிய வங்க தேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும் நிதானமாக பேட்டிங் செய்தது. 41 ஓவர்களில் அந்த அணி 163 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி அந்த அணி 46 ஓவர்களில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் 7 பந்துகளில் 7 ரன்களை எடுத்து முதல்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி சாம்பியன் ஆனது. கண்டிப்பாக கோப்பையை வென்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னதாக இந்திய வீரர்கள் பேட்டிங் செய்தபோது ஒரே திசையை நோக்கி ஓடி எளிதாக ரன்-அவுட் ஆன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 43-வது ஓவரின் முதல் பந்தை ரஹிபுல் வீசினார். அப்போது அதர்வா(3) ரன்களுடனும், ஜூரெல் (22) ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ரஹிபுல்லின் பந்தை எதிர்கொண்ட ஜூரெல் 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடி வந்தார். அவர் மறுமுனைக்கு வேகமாக ஓடிவந்து விட்டார். ஆனால் பாதி தூரம் ஓடிய அதர்வா மீண்டும் தன்னுடைய முனைக்கே திரும்பி விட்டார். இதைப்பார்த்த வங்கதேச வீரர்கள் எளிதாக ரன் அவுட் செய்தனர்.
Like Father Like Son#INDvBAN #U19CWCFinal 🏏 pic.twitter.com/FoAB4rtUKy
— CriCkeT KinG🤴🏻💎 (@imtheguy007) February 9, 2020
ஆனால் இந்திய வீரர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஓடிவந்து கிரீஸை தொட்டதால் இருவரில் யாரை வெளியேற சொல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து ரீபிளேவில் அதர்வா கிரீஸை முதலில் தொட்டதால், நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஜூரெல்(22) ஆட்டமிழந்து பெவிலியனை நோக்கி திரும்பினார். இதைப்பார்த்த ரசிகர்கள் அன்று பாகிஸ்தான் வீரர்கள் இதேபோல ரன் அவுட் ஆகும்போது எப்படி கிண்டல் செய்தீர்கள்? தற்போது இந்திய வீரர்களின் இந்த மோசமான ரன் அவுட்டுக்கு என்ன சொல்வீர்கள்? என்று கிண்டலடித்து வருகின்றனர்.
முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இதேபோல ரன் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
