நியூசிலாந்து வரைக்கும் 'பிளைட்' புடிச்சு... அத 'தூக்கிட்டு' வரும்போதே தெரியும்... இந்தியா 'தோத்துரும்னு'... ரசிகர்கள் கிண்டல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Feb 08, 2020 08:04 PM

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியை, நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

IND Vs NZ: New Zealand Beat India by 22 runs in second ODI

ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில், 273 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் சாஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

ஓபனிங் பேட்ஸ்மேன்கள் பிரித்வி ஷா(24), மயங்க் அகர்வால்(3) பெரிதாக ஜொலிக்காத நிலையில் கேப்டன் விராட் கோலியும் 15 ரன்களில் நடையைக் கட்டினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல்(4) ஒற்றை இலக்க எண்ணில் அவுட் ஆகி வெளியேறினார். கேதார் ஜாதவ்(9) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் கடுமையாக போராடிய ஷ்ரேயாஸ் ஐயரும் (52) ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.இதனால் ஒரு கட்டத்தில் இந்திய அணி 129 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் ஷர்துல் தாகூர், ஜடேஜா இருவரும் ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்தனர். ஆனால் தாகூர் 18 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து களமிறங்கிய நவ்தீப் சைனி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை பிரித்து மேய்ந்தார். 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 49 பந்துகளில் 45 ரன்களைக் குவித்த சைனி போல்டாகி வெளியேறினார். அதோடு இந்திய அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது. எனினும் 8-வது விக்கெட்டுக்கு ஜடேஜா-சைனி இருவரும் இணைந்து அதிகபட்சமாக 76 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தனர்.

ஒருபுறம் ஜடேஜா கடுமையாக போராடினாலும் மறுபுறம் சாஹல்(10) ரன்களில் அவுட் ஆனார். தொடர்ந்து 55 ரன்களில் ஜடேஜா ஆட்டமிழக்க 48.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 22 ரன்களில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முன்னதாக போட்டியின்போது இந்திய ரசிகர்கள் 'ஈ சாலா கப் நமதே' என்ற பெங்களூர் அணியின் மிக பிரபலமான ஐபிஎல் டயலாக்கை, எழுதிய பதாகைகள் தாங்கி இந்திய அணிக்கு ஆதரவு அளித்தனர். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போதே இது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்தனர். தற்போது இந்திய அணி தோல்வியைத் தழுவவும் இதை ஏண்டா நியூசிலாந்து வரைக்கும் தூக்கிட்டு வந்தீங்க? என்று கண்டபடி மீம்ஸ்கள் போட்டு சமூக வலைதளங்களில் போட்டிபோட்டு கலாய்த்து வருகின்றனர்.