'அந்த பையன பாத்து நானே ஷாக் ஆயிட்டேன்'... 'ஆச்சரியத்தில் உறைந்த சச்சின்'... யார் அந்த வீரர்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Feb 08, 2020 01:19 PM

கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் இந்திய வீரர் சச்சின், தாம் ஒரு வீரரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனதாகவும், யார் அந்த வீரர் என்பது குறித்தும் சச்சின் மனம் திறந்து பேசியுள்ளார்.

Sachin Tendulkar heaps praise on Marnus Labuschagne

ஆஸ்திரேலிய வரலாற்றில் இல்லாத அளவிற்கு அந்த நாட்டில் காட்டு தீ, கொழுந்து விட்டு எரிந்தது. இந்த கொடூர தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலநிதி திரட்ட 10 ஓவர் கண்காட்சி கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான அணியும், ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணியும் மோதுகின்றன. ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் பயிற்சியாளராக இருக்கிறார்.

இதற்காக ஆஸ்திரேலியவில் முகாமிட்டுள்ள சச்சினை செய்தியாளர்கள் சந்தித்துப் பல சுவாரசியமான கேள்விகளை எழுப்பினார்கள். அப்போது 'நீங்கள் விளையாடியபோது உச்ச நிலையிலிருந்த காலகட்டத்தில் ஆடியதை போல், தற்போது எந்த வீரராவது விளையாடுகிறாரா?' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சச்சின், ''கடந்த ஆண்டு ஆஷஸ் போட்டி தொடரில் லார்ட்சில் நடந்த இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். அதில் பவுன்சர் பந்து தாக்கியதில் ஸ்டீவன் சுமித் காயம் அடைந்து வெளியேறியதால், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக கமார்னஸ் லபுஸ்சேன் 2-வது இன்னிங்சில் ஆடினார்.

அப்போது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 2-வது பந்து லபுஸ்சேனை தாக்கியது. ஆனால் அதன் பிறகு அடுத்த 15 நிமிடங்கள் அவர் ஆடிய விதத்தைப் பார்க்கையில் பிரமிப்பாக இருந்தது. அப்போதே, ‘அந்த வீரரிடம் வித்தியாசமான திறமை இருக்கிறது, அவர் சிறந்த வீரராக உருவெடுப்பார்’ என எனக்குத் தோன்றியது. அவரது கால் நகர்த்தல் துல்லியமாக உள்ளது. கால் நகர்வு என்பது வெறும் உடல் ரீதியானது மட்டுமல்ல. அது மனரீதியானது.

நீங்கள் மனதளவில் நேர்மறையான எண்ணத்துடன் இல்லையென்றால் கால் நகர்த்தல் சரியாக வராது. மனதளவில் வலுவாக இல்லை என்றால் கால் நினைத்தபடி நகராது. அவரது கால் நகர்த்தல் நம்ப முடியாத வகையில் உள்ளது. அவரது பேட்டிங் நான் ஆடுவதைப் போன்றே உள்ளது'' என ஆச்சரியத்துடன் கூறியுள்ளார்.

Tags : #CRICKET #SACHIN TENDULKAR #MARNUS LABUSCHAGNE #AUSTRALIA BATSMAN