'தோனி வீட்டு கதவை உடைத்து திருட்டு'... 'விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்த கும்பல்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jun 07, 2019 10:27 PM
தோனியின் வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை, காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டர் 104 பகுதியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு சொந்தமாக ஒரு வீடு இருக்கிறது. இந்த வீட்டை விக்ரம் சிங் என்பவரின் பொறுப்பில் விட்டிருந்தார். பராமரிப்பு பணிகள் நடந்துக் கொண்டிருந்தநிலையில், கடந்த ஏப்ரல் மாதம் தோனியின் வீட்டில் இருந்த எல்இடி டிவி, லேப்டாப், பேட்டரி, இன்வெர்ட்டர்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் பல்வேறு வீடுகளில் கொள்ளையடித்தது தொடர்பாக ராகுல், பப்லு, இக்லக் ஆகிய 3 பேர் போலீஸாரிடம் சிக்கினர். இவர்களுக்கு வேறு ஏதாவது திருட்டில் தொடர்பு இருக்கிறதா என்று விசாரித்த போது, அவர்கள் தோனியின் வீட்டில் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நொய்டாவில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் தோனியின் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்து கொண்ட 3 கொள்ளையர்களும், வீட்டின் கதவை உடைத்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த விலை உயர்ந்த எல்இடி டிவி, 5 லேப்டாப்கள், பேட்டரிகள், இன்வெர்ட்டர்களை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவித்தனர். மேலும், ஆதாரங்களை அழிக்கும் வகையில் கேமரா பதிவான டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரையும் உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்' என்று தெரிவித்தார்.