'துணை முதல்வராகும் நடிகை ரோஜா?'... பரபரக்கும் அரசியல் களம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Jun 07, 2019 09:03 PM
நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, ஆந்திராவின் துணை முதல்வர்களில் ஒருவராக நியமியக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால் இன்னும் ஆந்திர மாநில அமைச்சரவை உருவாகவில்லை. இந்நிலையில் இன்று முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் தலைநகர் அமராவதியில் நடைபெற்றது.
அதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளிட்டார். அந்த அறிவிப்பு ஆந்திர அரசியலில் வியப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலத்தில் அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 5 துணை முதல்வர்களை நியமிப்பதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் நடிகை ரோஜா. சகோதரிபோல் தன்னை ஜெகன் மோகன் ரெட்டி நடத்துவதாக அண்மையில் நடிகை ரோஜா குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, நகரி சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான நடிகை ரோஜாவிற்கு, துணை முதல்வர் பதவியை ஜெகன் வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.
