‘காயத்தால் செமி பைனல் வாய்ப்பை இழந்த பிரபல வீரர்’.. அணிக்கு திரும்பிய மற்றொரு விக்கெட் கீப்பர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 08, 2019 10:35 AM
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர் விலகியிருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12 -வது உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில், தற்போது அரையிறுதிப் போட்டிக்கு 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவும், நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்தும் நாளை(09.07.2019) நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனை அடுத்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவும் மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்தும் வரும் வியாழக்கிழமை(11.07.2019) பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் க்வாஜா காயம் காரணமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது க்வாஜாவின் தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சில வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர். இதனை அடுத்து உஸ்மான் க்வாஜா அணியில் இருந்து விலக்கப்பட்டு அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூவ் வேட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ஆஸ்திரேலியாவின் மற்றொரு வீரரான மார்கஸ் ஸ்டோனிஸுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.