'11 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் சுவாரஸ்யம்'... 'அரையிறுதியில் மீண்டும் மோதும் 2 கேப்டன்கள்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Jul 07, 2019 06:37 PM
உலகக் கோப்பை தொடரில் 11 ஆண்டுகளுக்குப் பின் கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணியும் மோத உள்ள சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2019 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் வரும் செவ்வாய்க்கிழமை மோதவுள்ளது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை 2-வது அரையிறுதிப் போட்டி ஆஸ்திரேலிய-இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த 2 போட்டிகளிலும் வெல்லும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
முதல் அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி, 11 ஆண்டுகளுக்கு முன் நடந்தப் போட்டியை நினைவுப்படுத்துகிறது. கடந்த 2008-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக விராட் கோலியும், நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சனும் இருந்தனர்.
தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு இதே கேப்டன்கள் தலைமையில், உலகக் கோப்பை தொடரில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. 2008-ம் ஆண்டு நடைப்பெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 2008 -ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி, ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிம் சவுதி ஆகியோர் இருந்தனர். இவர்கள் தற்போதைய உலகக் கோப்பை தொடரிலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.