‘இதுவரை யாரும் நெருங்காத சச்சினின் 27 ஆண்டுகால சாதனை’.. ஒரே போட்டியில் முறியடித்த இளம் விக்கெட் கீப்பர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Jul 05, 2019 05:58 PM
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் 27 ஆண்டுகால சாதனையை ஆஃப்கானிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் முறியடித்துள்ளார்.
உலகக்கோப்பைத் தொடரில் தங்களது கடைசி லீக் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளும் நேற்று விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 311 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் சாய் கோப் 77 ரன்களும், நிக்கோலஸ் பூரன் மற்றும் எவின் லீவிஸ் ஆகியோர் 58 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 288 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. இதில் அதிகபட்சமாக ஆஃப்கான் அணியின் இளம் விக்கெட் கீப்பர் இக்ராம் அலி கில் 86 ரன்கள் அடித்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் சச்சினின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 1992 -ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் சச்சின் 84 ரன்கள் அடித்ததன் மூலம், இளம் வயதில்(18 வயது 323 நாட்கள்) அரைசதத்தைக் கடந்த வீரர் என்ற பெருமையை அடைந்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியுல் ஆஃப்கான் இளம் வீரர் இக்ராம்(18 வயது 278 நாட்கள்) 86 ரன்கள் அடித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.