‘இந்திய வீரர்களின் பாதுகாப்பு முக்கியம்’... 'புகார் அளித்த பிசிசிஐ'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Jul 07, 2019 05:15 PM

இந்தியா-இலங்கை அணிகளுக்கு எதிரானப் போட்டியின்போது, ‘காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற பேனர் பறக்க விடப்பட்டதை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துப்பூர்வமாக ஐசிசியிடம் புகார் தெரிவித்துள்ளது.

BCCI lodge official complaint with ICC against aerial banners

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை லீட்சில் இந்தியா-இலங்கை ஆகிய அணிகள் மோதின. போட்டி துவங்கிய சில ஓவர்களிலேயே ‘காஷ்மீருக்கு நீதி வேண்டும்’ என்ற வாசகம் பதிக்கப்பட்ட விமானம் வானில் பறந்தது. இந்த விமானம் மைதானத்தில் பல முறை சுற்றி வந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போட்டி நிறுத்தப்படவில்லை என்றாலும், மைதானத்தில் அமர்ந்து இருந்த ரசிகர்கள் மற்றும் வீரர்கள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. இதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபற்றிய எங்கள் கவலையை ஐசிசிக்கு தெரிவித்துள்ளோம். இதுபோன்ற சம்பவம் அரையிறுதிப் போட்டியிலும் தொடர்ந்தால், அது உண்மையிலேயே துரதிருஷ்டமாக அமையும். எங்கள் வீரர்களின் பாதுகாப்பு முக்கியமானது’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதற்கு ஐசிசி கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தது. இதுபற்றி ஐசிசி விடுத்த அறிக்கையில், ‘இதுபோன்ற சம்பவங்கள் எங்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது. கிரிக்கெட்டில் அரசியல் சார்ந்த செய்திகளைப் புகுத்துவதை, ஐசிசி ஒரு போதும் ஏற்காது. போலீசாருடன் இணைந்து நாங்களும், அரசியல் சார்ந்த போராட்டங்களைத் தவிர்க்க போராடி வருகிறோம். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்வதாக போலீசார் உறுதி அளித்துள்ளனர்' என தெரிவித்திருந்தது.

உலகக் கோப்பை தொடரில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது  முதல் முறை இல்லை. கடந்த ஜூன் 29-ம் தேதி பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டியின் போது, 'பலூசிஸ்தானுக்கு நீதி வேண்டும்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்த பேனர் விமானம் மூலம் பறக்கவிடப்பட்டது. இதனால் இருநாட்டு ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.