'13 பேரை' காவு வாங்கிய 'படையப்பா'...! நடுங்க வைக்கும் ஆக்ரோஷம்...! பதற வைக்கும் 'செல்ஃபி சேகர்கள்'...
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Suriyaraj | Jan 07, 2020 12:14 PM
கேரள மாநிலம், மூணாறில் மதம் பிடித்ததற்கான அறிகுறியுடன் சுற்றித் திரியும் ஆண் காட்டு யானை 'படையப்பா'வால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
படையப்பா என்னும் சொல் 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு திரையுலகில் ரஜினிகாந்தின் விஸ்வரூப வெற்றிகளை சுட்டுக்காட்டுவதாக நினைவில் உள்ளது. ஆனால் தற்போது ஒற்றை காட்டு யானை வடிவில் படையப்பா என்ற சொல் மீண்டும் மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பிறந்து மூணாறு பகுதியில் சுற்றித்திரியும் இந்த யானை, பொது மக்களையும், வாகன ஓட்டிகளையும் வழிமறித்து வெகுவாக அச்சுறுத்தி வருவதாக கேரள வனத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுமட்டும் இன்றி கேரள வனப்பகுதிகளில் இதுவரை சுமார் 13 பேரை கொன்றுள்ள கொலைகார யானை என்கிற பட்டமும் இந்த படையப்பாவுக்கு உண்டு.
மிகவும் பிரபலமான இந்த கொலைகார ஆண் காட்டு யானை, தற்போது இனப்பெருக்கத்திற்கான கட்டத்தை எட்டியுள்ளதால், மதம் பிடித்ததற்கான அறிகுறியுடன் சுற்றித்திரிகிறது. இதன் கண்களின் மேல் பகுதியில் இருந்து நீர் வடிந்த வண்ணம் உள்ளது. இதனால் ஆக்ரோஷமாக காணப்படும் இந்த யானை கண்ணில் படுவோரை எல்லாம் துரத்தி அச்சுறுத்துவதுடன் தாக்கிக் கொல்லும் மனநிலையுடன் சுற்றுத் திரிகிறது.
நேற்று முன்தினம் இந்த யானை பெரியவாரை குடியிருப்புப் பகுதியில் நுழைந்ததால், பதற்றம் ஏற்பட்டது. யானையின் நிலையை அறியாமல் பலர் அருகில் சென்று செல்பி எடுத்து வருவது பார்ப்பவர்களை பதற வைக்கிறது. நேற்று காலை மூணாறு டி.எஸ்.பி., அலுவலகம் அருகே மூணாறு-உடுமலைபேட்டை சாலையில் உலாவியது. அவ்வழியே சென்ற பலர் யானையைப் பார்த்து அருகில் செல்லாமல் ஓரமாக நின்றனர். மதம் பிடித்து யாரையும் தாக்குவதற்குள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டுமாறு பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.