இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி... நம்பி நாரயணணுக்கு... 1.3 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Dec 27, 2019 05:52 PM
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்ட இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, 1.3 கோடி இழப்பீடு வழங்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரோவில் ஏ.பி.ஜே. அப்துல்கலாமுடன் இணைந்து, டி1 ராக்கெட் தயாரிப்பில் துவங்கி, உலகின் முதல் திரவ எரிபொருளில் இயங்கும் என்ஜீனை அறிமுகம் செய்தவர் நம்பி நாரயணன். இஸ்ரோவின் க்ரையோஜின் மோட்டார் ஆராய்ச்சியின் இயக்குனராக பணியாற்றிவந்த நம்பி நாராயணன், பாகிஸ்தான் உட்பட சில வெளிநாடுகளுக்கு திரவ ராக்கெட் எரிபொருள் மற்றும் க்ரையோஜின் என்ஜீன் தொடர்பான செய்திகளை இஸ்ரோவிலிருந்து திருடி விற்றதாக கேரள போலீசாரால், குற்ற சதி பிரிவுகளுக்கு கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 1994-ம் ஆண்டு நவம்பர் 30-ம் நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரள போலீஸ் மற்றும் IB அமைப்புகளின் கட்டுப்பாட்டில் 50 நாட்கள் இன்னல்கள் அனுபவித்தப் பின்னர், கடந்த 1995 ஜனவரி 19-ல் பெயிலில் விடுதலையானார். சில மாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ கைக்கு மாறியது. ஒன்றரை வருட விசாரணைக்குப் பிறகு, 1996-ம் ஆண்டு சி.பி.ஐ. அளித்த முடிவுகளின் பேரில் நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட வழக்கு, பொய்யான வழக்கு என உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2003-ம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையம் சார்பில் பொய்யான வழக்குப்பதிந்த கேரள போலீஸ் மீதும் IB அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படியும், நம்பி நாராயணனுக்கு நேர்ந்த மன உளைச்சலுக்கு இழப்பீடு கொடுக்க கோரியும், திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை சமரசம் செய்து கொள்வதற்காக 1 கோடியே 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேரள முன்னாள் முதன்மை செயலாளர் ஜெயக்குமார் சிபாரிசு செய்திருந்தார்.
இந்த சிபாரிசை ஏற்று கொண்ட கேரள அமைச்சரவை, அந்தப் பணத்தை கொடுக்க தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வழங்கிய 50 லட்சம் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் சிபாரிசு செய்த 10 இலட்சம் ரூபாய் ஆகியவற்றை தொடர்ந்து தற்போதைய இந்த தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.