'3 நாட்களுக்கு முன்பு 341...' இப்போது, '606 ஆக' உயர்வு.... இந்தியாவில் 'காட்டுத் தீ' வேகத்தில் பரவும் 'கொரோனா...' விரைவில் 'சமூகத் தொற்றாக' மாறும் 'அபாயம்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Mar 26, 2020 11:34 AM

இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 341 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, மூன்றே நாட்களில் 606ஆக அதிகரித்துள்ளது.

The fastest spreading corona Risk of becoming social epidemic

இந்தியாவில் முதன் முறையாக கடந்த ஜனவரி 30ஆம் தேதி சீனாவின் வூகானில் படித்து வந்த கேரள மாணவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த 4 நாட்களில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மூவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அவர்கள் உடல் நலம் தேறி வீடு திரும்பினர்.

இதையடுத்து சுமார் ஒரு மாதத்திற்கு வேறு யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் மார்ச் 4ம் தேதி இந்தியா முழுவதும் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து மார்ச் 18ஆம் தேதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த 22ம் தேதி இந்த எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் அப்படியே இரட்டிப்பானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 341 என அறிவிக்கப்பட்டது. அடுத்த 3 நாட்களில் 567 ஆக அதிகரித்தது. தற்போது 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா ஒரு சமூகத் தொற்றாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் 109 பேரும், மகாராஷ்டிராவில் 101 பேரும், கர்நாடகாவில் 41 பேரும், குஜராத்தில் 33 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் தலா 35 பேரும், ராஜஸ்தானில் 32 பேரும், டெல்லியில் 31 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் 29 பேருக்கும். தமிழகத்தில் 23 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லடாக்கில் 13 பேரும், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 9 பேரும், சண்டிகர் மற்றும் காஷ்மீரில் தலா 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பீகார் மற்றும் இமாச்சலில் தலா மூவரும், ஒடிசாவில் இருவரும், சட்டீஸ்கர், மிசோராம், மணிப்பூர் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 பேர் வெளிநாட்டினர் ஆவர்.

தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததை அடுத்து நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தமிழகம், மேற்கு வங்கம், பஞ்சாப், கர்நாடகா, இமாச்சல், குஜராத், டெல்லி மற்றும் பீகாரில் தலா ஒருவரும், மகாராஷ்டிராவில் இருவரும் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : #CORONA #INDIA #FASTEST SPREADING #SOCIAL EPIDEMIC