'கொரோனா நோயாளிகளுக்கு உதவ களத்தில் இறங்கிய ரயில்வே!'... இந்த திட்டம் சாத்தியமா?... மத்திய அரசு பரிசீலனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றித் தர இந்திய ரயில்வே முன்வந்துள்ளது.
இந்திய ரயில்வே நாளொன்றுக்கு 13,523 ரயில்களை இயக்கி வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்காக, பிரதமரின் ஊரடங்கு அறிவிப்பின்படி வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து ரயிலையும், ரயில்வே ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், ரயில்வே அமைச்சருடன் ரயில்வே வாரியத் தலைவர், அனைத்து மண்டலங்கள் மற்றும் கோட்டங்களின் ரயில்வே பொது மேலாளர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளை, கொரோனாவுக்கு அவசர சிகிச்சை வார்டுகளாக மாற்றுவது குறித்து பரிசீலனை செய்தனர். மேலும், கொரோனா சிகிச்சைக்கு உதவும் வென்டிலேட்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், நோயாளிகளை அழைத்து செல்வதற்கான டிராலிகள் உள்ளிட்ட மருத்துவத் துறையின் அத்தியாவசிய உபகரணங்களை உற்பத்தி செய்வது குறித்தும் விவாதித்தனர்.
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து, நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழிகளை பிரதமர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ரயில்வே அமைச்சகம் சார்பில் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டதாக தெரிகிறது. உலக சுகாதார அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் மூன்று படுக்கை வசதிகளையாவது ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இரு படுக்கைகளையாவது ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.