கருப்பு தினம்: கொரோனா 'உயிரிழப்பில்'... சீனாவை முந்தி இத்தாலியைத் 'துரத்தும்' நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா உயிரிழப்பில் சீனாவை ஸ்பெயின் நாடு முந்தியுள்ளது. இதனால் அந்நாட்டு அரசு நேற்றைய நாளை கருப்பு தினமாக அறிவித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருவதால் இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து வருகின்றன.
இந்த நிலையில் ஸ்பெயின் நாடு கொரோனாவால் தொடர்ந்து அதிக உயிரிழப்புகளை சந்திக்க ஆரம்பித்துள்ளது. இதுவரை அந்நாட்டில் கொரோனாவுக்கு 3434 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஸ்பெயின் கொரோனா உயிரிழப்பில் சீனாவை (3285) முந்தியுள்ளது. உலகளவில் இத்தாலி(6820) நாடு கொரோனா உயிரிழப்பில் முதலிடம் பிடித்துள்ளது. அதிகரிக்கும் உயிரிழப்புகளால் இத்தாலிக்கு அடுத்த இடத்தை தற்போது ஸ்பெயின் பிடித்திருக்கிறது.
மொத்தமாக 47,610 பேர் இதுவரை ஸ்பெயினில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 738 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர். இதனால் அந்நாடு கருப்பு தினமாக இந்த நாளை அறிவித்து இருக்கிறது. அங்குள்ள பல முதியவர்கள் இறந்து வீட்டிற்குள் இருந்ததாகவும், அவர்கள் உடலை கைப்பற்றி அப்புறப்படுத்தியதாகவும் ஸ்பெயின் ராணுவம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
