'கொரோனாவை' கட்டுக்குள் கொண்டுவர... '123 ஆண்டுகள்' பழமையான சட்டம்... எதெல்லாம் 'செய்யக்கூடாது' தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 25, 2020 11:50 PM

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு 123 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1897-ம் ஆண்டு, பிப்ரவரி 4-ம் தேதி இயற்றப்பட்ட ஒரு சட்டம் தற்போது உதவுகிறது. அந்த சட்டம்தான் 'தொற்றுநோய்கள்' சட்டம் ஆகும். இந்த சட்டம், மாநில அரசுகளுக்கு சிறப்பு அதிகாரங்களை தந்துள்ளது. பிளேக் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் அந்தக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. மாறும் காலத்துக்கு ஏற்ப இந்த சட்டத்திலும் தற்போது  பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Coronavirus: 123 Years old Epidemic Act used in India

தமிழகம், கர்நாடகம், மஹாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி, கோவா என பல்வேறு மாநிலங்களும் இந்த சட்டத்தை பயன்படுத்தி தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி வருகின்றன. இதன் கீழ் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க முடியும். நிறுவனங்கள் இயங்குவதை முடக்கவும், பள்ளிகளை மூடவும், வீடுகளில் இருந்து வேலை செய்யவும் வழிவகுத்து தந்திருக்கிறது.

எல்லைகளை மூடல், வாகன போக்குவரத்துகளை தடை செய்தல், பொதுமக்கள் கூடுவதை தடை செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் இந்த சட்டம் உதவுகிறது. இந்த சட்டத்தின்படி பிறப்பிக்கப்படுகிற உத்தரவுக்கு யாரும் பணிந்து நடக்காவிட்டால் அவர்களை இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 188-ன் கீழ் தண்டிக்கவும் முடியும். இந்த சட்டத்தின்படி செயல்படுத்துகிற எந்தவொரு நடவடிக்கைக்கும் அல்லது எந்தவொரு அதிகாரிக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.