இந்தியா முழுக்க 'எவ்ளோ பேரு மருத்துவ கண்காணிப்புல இருக்காங்க தெரியுமா?'... போர்க்களத்தில் நிற்கும் போர் வீரர்கள் 'இவர்கள்'... மத்திய அரசு உருக்கம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Mar 25, 2020 02:26 PM

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 2 லட்சம் பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

ministry of health and family welfare statement on covid19

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. 22 மாநிலங்களில் இதுவரை 519 பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 12 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. ஏப்ரல் 14-ந் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 35 ஆயிரத்து 73 பேர் 28 நாட்கள் தனிமை காலத்தை நிறைவு செய்துள்ளனர். இதுவரை இந்தியா முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 12,872 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தேசிய நோய் தடுப்பு மையம் (என்.சி.டி.சி.) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அமைப்பின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஸ்வர்த்தன் காணொளி காட்சி மூலம் உரையாடினார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக தேசிய நோய் தடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளும் மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்படுகிறது. இதுவரை 2 லட்சம் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 52 ஆயிரத்துக்கு மேற்பட்ட இ-மெயில் கேள்விகளுக்கு பதில் அனுப்பப்பட்டு உள்ளது.

போர்க்களத்தில் முன்னணியில் இருக்கும் போர் வீரர்கள் போல என்.சி.டி.சி. ஊழியர்கள், விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர். தங்கள் உயிரை பணயம் வைத்து நாட்டு மக்களுக்காக தன்னலமின்றி சேவையாற்றி வரும் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.

காய்ச்சல் அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் செல்லக்கூடாது. பொது மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் வீட்டில் இருப்பதே பாதுகாப்பானது. குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் கண்டிப்பாக வெளியில் செல்லக்கூடாது.

சமூக விலகலை உறுதியுடன் கடைபிடியுங்கள். மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : #CENTER #GOVT #CORONAVIRUS #INDIA