முன்கூட்டியே 'திட்டமிட்டு' பஞ்சர் செய்து.. 'உதவி' செய்வது போல நடித்தோம்.. 'அதிர' வைத்த கொலையாளிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 29, 2019 10:01 PM

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொலை  வழக்கில், போலீஸ் 4 பேரை கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத்தண்டனை அளிக்க வேண்டும் என பிரபலங்கள், பொதுமக்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Telangana doctor murder; Chilling details being shared by Police

இந்தநிலையில் சற்றுமுன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சைபராபாத் காவல்துறை இந்த குற்றம் தொடர்பான முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் குற்றவாளிகள் நால்வரையும் 376, 302 பி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸ் கஸ்டடியில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நிர்பயா சட்டத்தின் கீழும் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மொஹம்மது ஆரிஃப் லாரி டிரைவராகவும், ஜொல்லு சிவா(20), ஜொல்லு நவீன்(20), சிந்தகுண்டா சென்னகேசவலு ஆகிய மூவரும் லாரி கிளீனர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

பெண் மருத்துவர் கொலை குறித்து போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் கூறுகையில், '' பிரியங்கா தன்னுடைய ஸ்கூட்டியில் மாலை 6 மணிக்கு ஷம்சாபாத் டோல் பிளாசாவிற்கு வந்து அங்கு தன்னுடைய ஸ்கூட்டியை பார்க் செய்துள்ளார். அப்போது இந்த குற்றவாளிகள் நால்வரும் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். பெண் மருத்துவரை பார்த்தவுடன் அவரை வன்புணர்வு செய்யலாம் என திட்டமிட்டுள்ளனர்.

அது தெரியாமல் பிரியங்கா தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு மருத்துவரை சந்திப்பதற்காக கேப் பிடித்து சென்றுள்ளார். அப்போது நவீன் என்பவர் பிரியங்காவின் ஸ்கூட்டி டயரை பஞ்சர் செய்துள்ளார். வேலை முடிந்து மீண்டும் இரவு 9:18 மணிக்கு  பிரியங்கா மீண்டும் வந்து ஸ்கூட்டியை எடுத்தபோது ஒரு டயர் பஞ்சர் ஆகி இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.

அப்போது முக்கிய குற்றவாளியான முஹம்மது ஆரிஃப் நான் உதவி செய்கிறேன் என கூற, பிரியங்கா வேண்டாம் என மறுத்துள்ளார். மற்றொரு குற்றவாளியான ஜொல்லு சிவா அவருடைய ஸ்கூட்டியை ரிப்பேர் செய்து வருவதாக கூறி வண்டியை வாங்கி சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து ஸ்கூட்டியை கொண்டுவந்து அனைத்து மெக்கானிக் ஷாப்களும் மூடியுள்ளன என்று தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து திட்டமிட்டபடி அவர்கள் நால்வரும் பிரியங்காவை கடத்தி சென்று வன்புணர்வு செய்துள்ளனர். துணியால் அவரது வாயை மூடியதால் மூச்சுத்திணறி அவர் இறந்துள்ளார். தொடர்ந்து அருகில் இருக்கும் கடையில் பெட்ரோல் வாங்கிவந்து அவரது உடலை தீவைத்து எரித்துள்ளனர். ஷம்சாபாத் டோல் பிளாசாவில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. மாட்டி கொள்ளக்கூடாது என்பதற்காக ஸ்கூட்டியின் நம்பர் பிளேட்டையும் கழற்றி எரிந்துள்ளனர்,'' என்றார்.

மேலும், ''பிரியங்கா குடும்பத்தினர் அவர் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்த மறுநாள் காலை 7 மணியளவில் அவரது எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. நாங்கள் டோல் பிளாசா அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது குற்றவாளிகளில் ஒருவன் அதில் இருந்தான். தொடர்ந்து அதிகாலை 5 மணிவரை நாங்கள் அருகில் இருக்கும் அனைத்து பஞ்சர் கடைகளிலும் தேடினோம். தொடர்ந்து காலை 7 மணியளவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

நாங்கள் அந்த குற்றவாளிகளை கோர்ட்டில் நிறுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கித்தருவோம். மேலும் இந்த வழக்கை பாஸ்ட் ட்ராக் கோர்ட்டில் ஒப்படைத்து வழக்கை விரைவாக நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.