ஒரே நேரத்துல 25 'ஸ்கூல்'ல வேல... ஒரு வருஷத்துல வாங்குன 'சம்பளம்' எவ்ளோன்னு... தெரிஞ்சா 'ஷாக்' ஆயிடுவீங்க... மிரளவைத்த 'ஆசிரியை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே நேரத்தில் 25 அரசுப் பள்ளிகளில் ஆசிரியை ஒருவர் பணிபுரிந்த சம்பவம் அதிகாரிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூரி நகரை சேர்ந்தவர் அனாமிகா சுக்லா. அறவியல் ஆசிரியையான இவர், அங்குள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் முழு நேர ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஆனால் இவரது பெயர், அம்பேத்நகர், பாக்பத், அலிகார், சஹாரன்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 பள்ளிகளிலும் பணிபுரிவதாக பதிவேட்டில் உள்ளது.
இதனால் கடந்த 13 மாதங்களில் அனாமிகா சுக்லாவுக்கு 25 பள்ளிகள் மூலம் ஊதியமாக ரூ. 1 கோடி வரை கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆன்லைன் மூலம் ஊதியம் வழங்கப்படுவதால் இதை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பள்ளிவாரியாக ஆசிரியர்களுக்கு 'மனவ் சம்பதா' என்னும் டேட்டா பேஸ் இணையதளத்தில் உருவாக்கப்பட்டது.
அப்போது அனாமிகா சுக்லாவின் பெயர் 25 பள்ளிகளில் ஆசிரியர் வருகை பதிவேட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 25 பள்ளிகளும் அனாமிகாவுக்கு கடந்த 13 மாதம் ஊதியம் வழங்கி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து அம்மாநில பள்ளிக் கல்வி இயக்குனர் விஜய் கிரண் நிருபர்களிடம் தெரிவிக்கையில், 'இது மிகப் பெரிய மோசடி. இது எப்படி நடந்தது என தெரியவில்லை. இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இத்தனை பள்ளிகள் மூலம் ஒரு கோடி ரூபாய் ஊதியம் வரும் என்ற தகவலை ஒரு ஆசிரியராக அவர் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டியது அவர் கடமை. அதுமட்டுமில்லாமல் 25 பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் தனது வருகைப் பதிவையும் அனாமிகா செய்து வந்துள்ளதால் விசாரணை நடந்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனாமிகா சுக்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை. அவருக்கான ஊதியமும் தடை செய்யப்பட்டுள்ளது. அனாமிகா தவறு செய்தது உறுதியானால் நிச்சயம் அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்டும் என்றும், அவருக்கு உடந்தையாக அதிகாரிகள் யாரேனும் செயல்பட்டது தெரிய வந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில பள்ளிக்கல்வி அமைச்சர் சதீஸ் திவேதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.