'என்ன' நடந்தாலும் 'நிச்சயம் பண்ணிய' பெண்ணை 'கல்யாணம்' பண்ணியே 'தீருவேன்'!.. கொரோனா லாக்டவுனால் மாப்பிள்ளை எடுத்த அதிரடி முடிவு!'
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 100 கி.மீ சைக்கிளில் சென்று, “நிச்சயம் பண்ணிய தேதியில் கண்டிப்பாக கல்யாணம் செய்தே தீருவேன்” என்கிற ரீதியில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கு பிரஜாபதி என்கிற 23 வயதான இளைஞருக்கு மஹோபா மாவட்டத்தை சேர்ந்த ரிங்கி என்கிற பெண்ணுடன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயிக்கப்பட்ட அந்தத் திருமணம் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோமா காரணமாக இந்தியா முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே தங்களின் திருமணத்துக்காக மாவட்ட காவல்துறையினரின் அனுமதியையும் கோரினர். ஆனால் திருமண தேதி நெருங்கிய போதும் அனுமதி கிடைத்ததாக தெரியவில்லை. இதனால் அதிரடியாக முடிவெடுத்த மணமகன், மணமகள் வீட்டாரை போனில் அழைத்து, “நான் சைக்கிளில் வந்து விடுகிறேன். திருமண வேலைகளை நீங்கள் கவனியுங்கள்” என்று சைக்கிளிலேயே சென்று 100 கிலோமீட்டர் கடந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை கரம் பிடித்தார்.
இதுபற்றி பேசிய கல்கு பிரஜாபதி, “திருமண தேதியை நெருங்கியும் அதற்கான அனுமதி எங்களுக்கு கிடைக்கவில்லை. எனக்கும் வேறு வழி இல்லை என்னிடம் பைக் இருக்கிறது, ஆனால் ஓட்டுநர் உரிமம் இல்லை. அதனால் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். எனக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் இருக்க முகத்தில் ஒரு துணியைக் கட்டிக் கொண்டேன். உறவினர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ சர்ட் அணிந்து கொண்டு சென்றேன். திருமணத்துக்கான அழைப்பிதழ் எல்லாம் அடித்து எல்லா ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வேறுவழியின்றி இந்த முடிவு எடுக்க வேண்டியதாயிற்று. இதனால் 100 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று கிராமத்துக் கோயில் ஒன்றில், இருவரும் சாதாரண உடையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டோம். முக்கியமான சடங்குகளை மட்டும் செய்து கொண்டோம்.
இந்த பொது முடக்கம் முடிந்த பின்னர் உறவினர்கள் அனைவரையும் அழைத்து மற்ற சடங்குகள், விருந்து உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். திருமணம் முடிந்தபின் மனைவியை அழைத்துக்கொண்டு சைக்கிளிலேயே 100 கி.மீ கடந்து வீடு திரும்பினேன். 2 பேர் சைக்கிளில் வருவது சற்று கடினமாகத்தான் இருந்தது. என் கால்கள் இவ்வளவு வலிக்கும் என சைக்கிள் மிதிக்கும்போது கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை. 100 கிலோ மீட்டர் என் மனைவியை சைக்கிளில் அழைத்து வந்த பின்னர் என் கால்களில் வலி அதிகமாகியது. இதனால் இரவு நிம்மதியாக தூங்கவும் முடியவில்லை. வலியைப் போக்கிக் கொள்ள வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்திக்கொண்டேன். எனினும் எங்கள் திருமணம் நல்லபடியாக முடிந்ததால், எங்கள் வீட்டார் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். வீட்டில் தேவையில்லாத சில பிரச்சனைகள் எழுந்ததால் திருமணத்தை உடனடியாக நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாததால், சமையல் பணிகளையும் சரிவர மேற்கொள்ள முடியவில்லை. எங்களுக்கு உதவி செய்ய கூட யாரும் இல்லாத சூழ்நிலை. அதுமட்டுமல்லாமல் இந்த பொதுமுடக்கம் எத்தனை நாள் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை. எப்போது முடிவுக்கு வரப்போகிறது என்றும் விளங்கவில்லை. அதனால் இவ்வளவு சிரமப்பட்டு திருமணத்தை செய்து முடித்துக் கொண்டோம்” என்று தெரிவித்துள்ளார்