கர்ப்பிணி யானை மட்டுமில்ல ‘இந்த’ விலங்கும் வெடியாலதான் இறந்திருக்கு.. போட்டோ வெளியிட்ட ஐஎஃப்எஸ் அதிகாரி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉணவில் வெடிவைத்து கர்ப்பிணி யானை இறந்ததுபோல் கழுதைப்புலியும் கொல்லப்பட்டுள்ளதாக ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் வனப்பகுதியில் இருந்து கர்ப்பிணி யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்துள்ளது. பசியுடன் சுற்றிய யானை வெடி மருந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டுள்ளது. இதனால் யானையின் வாய்க்குள் வெடி வெடித்து சிதறியுள்ளது. இதில் வாய் மற்றும் நாக்கில் பலத்த காயமடைந்த யானை வலி தாங்க முடியாமல் ஓடியுள்ளது.
ஆனால் எந்த மனிதரையோ, வீட்டையோ சேதப்படுத்தாமல் யானை சென்றிருக்கிறது. நாளுக்குநாள் பசி அதிகரித்துள்ளது, ஆனால் வாயில் ஏற்பட்ட காயத்தால் எதையும் உண்ண முடியாமல் யானை தவித்துள்ளது. பின்னர் வலியின் வேதனை தாங்க முடியாமல் அருகில் உள்ள ஆற்றில் இறங்கி நின்றுள்ளது. இதனை அறிந்த வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் அந்த கர்ப்பிணி யானையை மீட்க முயன்றனர். ஆனால் சில மணிநேர போராட்டத்துக்கு பின்னர் யானை பரிதாபமாக உயிரிழந்தது. இறந்த கர்ப்பிணி யானைக்கு 15 வயதுதான் ஆகிறது என்றும், இது அதற்கு முதல் பிரசவம் என்றும் யானையை பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐஎஃப்எஸ் அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில்,‘கர்ப்பிணி யானை இறந்தது இன்று தலைப்பு செய்தியாக உள்ளது. அதற்காக நாம் அனைவரும் வருத்தப்படுகிறோம். யானை கர்ப்பமாக இருந்ததால், நம்மை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. இந்த புதைத்து வைத்த வெடிகள் எல்லா இடங்களிலும் நூற்றுக்கணக்கான விலங்குகளை கொன்று வருகின்றன. அப்படி வெடித்த வெடியால் கழுதைப்புலி ஒன்று இறந்துள்ளது. இந்த உயிரினங்கள் அனுபவிக்கும் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என வாயில் வெடி வெடித்து சிதைந்த கழுதைப்புலியின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
Elephant news is in air &all of us are grieving. She was pregnant maybe that's making us emotional.
Bait bombs are killing hundreds of animals everywhere. Here a striped hyena had succumbed to one such bait. Can't tell in words the pain they go through. pic.twitter.com/hyU2WM3ERg
— Sudha Ramen IFS 🇮🇳 (@SudhaRamenIFS) June 3, 2020