‘இறந்த மகளை புதைக்க குழி தோண்டிய அப்பா’.. ‘குழிக்குள் உயிருடன் இருந்த இன்னொரு குழந்தை’ மிரள வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Oct 14, 2019 01:08 PM

இறந்த குழந்தையை புதைப்பதற்காக குழி தோண்டிய போது மண்பானையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man digs pit to bury daughter, Finds baby buried alive in earthen pot

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலி என்ற பகுதிக்கு அருகே ஹித்தேஷ் குமார் சிரோஹி என்பவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை 7 மாத குறைபிரசவத்தில் பிறந்ததால், பிறந்த சில நிமிடங்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனால் குழந்தையை அடக்கம் செய்வதற்காக ஹித்தேஷ் குமார் குழி தோண்டியுள்ளார்.

சுமார் 3 அடி ஆழம் தோண்டியபோது குழிக்குள் ஒரு மண்பானை கிடைத்துள்ளது. அதில் பச்சிளம் குழந்தை ஒன்று மூச்சு விட முடியாமல் தவித்துக்கொண்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஹித்தேஷ் குமார் உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், குழந்தையின் மருத்துவ செலவுகளை பிதாரி செய்ன்பூர் எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா ஏற்றுக்கொண்டதாக மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்பானையில் புதைத்தது யார்? குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தை எப்போது புதைக்கப்பட்டது? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பச்சிளம் குழந்தை உயிருடன் மண்பானையில் வைத்து புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DAUGHTER #NEWBORN #POT #UP #UTTARPRADESH