‘வாயில் காயம்’!.. ஒரு மாசத்துக்கு முன் இதேபோல் இறந்த ‘பெண்யானை’.. வெளியான அதிர்ச்சி தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் வாயில் காயத்துடன் மற்றொரு பெண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் வனப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி யானை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெடிமருந்து நிரப்பப்பட்ட அன்னாசி பழத்தை சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த கர்ப்பிணி யானைக்கு 15 வயதுதான் ஆவதாகவும், அதற்கு இதுதான் முதல் பிரசவம் என்றும் யானையை பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்தார்.
மேலும் இந்த யானை வாயில் வெடி வெடித்து ஓடியபோது கூட மனிதரையோ, வீட்டையோ சேதப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. கடுமையான பசியில் இருந்த யானை, வாயில் ஏற்பட்ட காயத்தால் ஏதும் சாப்பிடாமலேயே இருந்துள்ளது. பின்னர் வலி தாங்க முடியாமல் அருகில் உள்ள ஆற்றில் நின்றே உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் கேரளாவின் கொல்லம் பகுதியில் இதேபோல் வாயில் காயத்துடன் சுற்றி வந்த மற்றொரு பெண் யானை உயிரிழந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தின் பதானபுரம் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று வாயில் கடுமையான காயத்தோடு சுற்றி வந்துள்ளது. வலியின் காரணமாக யானைக் கூட்டத்துடன் சேராமல் தனியாகவே இருந்துள்ளது. இதனை அடுத்து கடந்த மாதம் அந்த பெண் யானை உயிரிழந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பதானபுரம் வனச்சரக அதிகாரிகள், உயிரிழந்த யானையின் வாய் பகுதியில் இருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். ஏற்கனவே அன்னாசி பழத்தில் வெடி வைத்து கர்ப்பிணி யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் இதேபோல் வாயில் காயத்துடன் பெண் யானை இறந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.