உலகை உலுக்கிய ‘புளூ கேர்ளின்’ மரணத்திற்குப் பிறகு.. ‘கிடைத்துள்ள அனுமதி’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Oct 09, 2019 04:38 PM

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஈரானில் கால்பந்தாட்டத்தை மைதானத்தில் காண பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Iran women to attend football match for 1st time in decades

ஈரான் நாட்டில் மைதானத்திற்கு வந்து கால்பந்தாட்டத்தைக் காண பெண்களுக்கு 1981ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பெண்களையும் மைதானங்களில் விளையாட்டைக் காண அனுமதிக்க வேண்டும் எனப் பல போராட்டங்களை நடத்தியவர் சஹர் கோடயாரி. புளூ கேர்ள் (அவருக்குப் பிடித்த கால்பந்தாட்ட அணியின் சீருடை நிறம்) என அழைக்கப்படும் இவர் கடந்த மார்ச் மாதம் ஆண் வேடமிட்டு மைதானத்திற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார்.

6 மாதங்களாக நடந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சஹருக்கு 6 மாதம் முதல் 2 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் அவர் நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி சஹர் செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து விளையாட்டை நேரில் பார்த்து ரசிக்கக்கூட பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு உலகம் முழுவதிலிருந்தும் பெரும் கண்டனம் எழுந்தது. சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பான பிஃபா பெண்களையும் கால்பந்தாட்ட மைதானத்தில் அனுமதிக்காவிட்டால் ஈரான் அணி நீக்கப்படும் என எச்சரித்தது.

இதையடுத்து தற்போது ஈரானில் கால்பந்தாட்டத்தை மைதானத்தில் காண பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள ஈரான் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், “இன்னும்கூட என்னால் இதை நம்ப முடியவில்லை. நான் எல்லாப் போட்டிகளையும் தொலைக்காட்சியில்தான் பார்ப்பேன். இனி நேரடி அனுபவம் கிடைக்கப் போகிறது” எனக் கூறியுள்ளார்.

Tags : #IRAN #FOOTBALL #STADIUM #MATCH #WOMAN #PERMISSION #SAHARKHODAYARI #FIRE #DEAD #FIFA