'அதெல்லாம்' ஒரு மேட்ச் கூட ஆடக்கூடாது... 'முன்னணி' வீரருக்கு நோ சொன்ன கங்குலி... இதெல்லாம் 'நல்லா' இல்ல!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 06, 2020 04:18 PM

ரஞ்சிக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற 9-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது. இதில் சவுராஷ்டிரா அணியும், பெங்கால் அணியும் மோதவுள்ளன. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இந்த இறுதிப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Ganguly says no to Ravindra Jadeja playing Ranji Trophy

இந்த நிலையில் சவுராஷ்டிரா அணியின் வலிமையை அதிகரிக்கும் பொருட்டு ஜடேஜாவை அந்த அணிக்கு விளையாட வைக்க மாநில கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. பதிலுக்கு கங்குலி அதெல்லாம் முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் வருகின்ற மார்ச் 12-ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் ஜடேஜாவை ஆடும் லெவன் அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். இதனால் தான் கங்குலியே நேரடியாக இதற்கு பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கு சவுராஷ்டிரா கிரிக்கெட் அமைப்பின் மாநில தலைவர் ஜெயதேவ் ஷா ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியின் போது ஏன் சர்வதேச போட்டி நடத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது இந்திய அணி எந்தவித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் பார்த்து கொள்கிறீர்கள்? ஐபிஎல்லுக்கு ஒரு நியாயம்? ரஞ்சிக்கோப்பைக்கு ஒரு நியாயமா? எனவும் அவர் விமர்சனம் செய்துள்ளார். தொடர்ந்து முன்னணி வீரர்கள் ஆடினால் தான் இந்தத்தொடர் மக்கள் மத்தியில் சென்றடையும் என்றும் தன்னுடைய தரப்பு நியாயத்தை அவர் எடுத்துரைத்து இருக்கிறார்.

இன்று இந்திய அணியின் தலைசிறந்த வீரர்கள் பலரும் ரஞ்சிக்கோப்பை போட்டிகளில் ஆடி இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் சவுராஷ்டிரா அணிக்காக புஜாராவும், பெங்கால் அணிக்காக விருத்திமான் சஹாவும் ஆடவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.