இன்னைக்கு பந்த் வண்டி போகாது... கேரள சேட்டனின் தடாலடி உத்தரவு... நொந்து போன நோபல் பேராசிரியர்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Suriyaraj | Jan 09, 2020 01:40 PM

கேரளாவுக்கு சுற்றுலா வந்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மைக்கேல் லெவிட்டை கேரளாவைச் சேர்ந்த ஒருவர்  துப்பாக்கி முனையில் 5 மணி நேரம் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nobel laureate Professor tragic incident happened in Kerala

மைக்கேல் லெவிட் (Michael Levitt) என்பவர் அமெரிக்க-பிரிட்டிஷ்-இஸ்ரேலிய உயிர் இயற்பியலாளராகவும், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் (Stanford) பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் பேராசிரியராகவும் உள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்போது மைக்கேல், கேரளாவில் நடந்த ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அம்மாநில அரசின் விருந்தினராகக் கொச்சி வந்துள்ளார்.

இதனிடையே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.  இதையொட்டி தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கேரளாவின் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், நேற்று மைக்கேல் தன் குடும்பத்தினருடன் ஆழப்புலாவில் சுற்றுலா படகு சவாரி செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர், மைக்கேலின் படகை நடுவழியிலேயே நிறுத்தியுள்ளார். `மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் நடப்பதால் படகு இயக்கக் கூடாது' என மிரட்டியுள்ளார். கையில் துப்பாக்கியுடன் இருந்த அந்த நபரிடமிருந்து சுமார் ஐந்து மணிநேரத்துக்குப் பிறகு மைக்கேல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தான் நோபல் பரிசு பெற்ற பேராசியர் என்றும், கேரள அரசின் விருந்தினராக வந்திருப்பதாகவும் எவ்வளவோ எடுத்துக் கூறியும்,  அந்த நபர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. தனக்கு நடந்த கசப்பான சம்பவம் தொடர்பாக மைக்கேல், கோட்டயம் சுற்றுலா முகவருக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளார். அதில், "இந்தியா கொஞ்சம் கொஞ்சமாகச் சட்டவிரோதத்தில் மூழ்கி வருகிறதோ என்ற பயம் எனக்கு வந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மைக்கேலை மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், நடைபெற்ற மோசமான சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tags : #NOBEL LAUREATE #PROFESSOR #TRAGIC INCIDENT #KERALA